Sri Lanka Road Accidents & First aid

இலங்கையில் சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒரு வீதி விபத்து இடம் பெறுகிறது.(ஆதாரம்01). இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி 2017 ஆம் ஆண்டிக்கான வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3101. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 மரணங்கள். (ஆதாரம் 02) (ஆதாரம் 03)
அதிக மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் ஏட்படுகின்றன. (புள்ளிவிபரம் Link இல் இணைக்கப்பட்டுள்ளது.)

கீழுள்ள பகுதி  Dr Sanjayan ஆல் எழுதப்பட்டது. (ஆதாரம் 04)

வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புக்கள், ஊன முற்றோர்; மற்றும் காயமுற்றோர்; காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பானது ஒரு தனிக் குடும்பத்தை மட்டுமின்றி முழு நாட்டையுமே பாதிக்கவே செய்கின்றது. இவர்களை பராமரிப்பதற்காக குடும்ப அங்கத்தவர்களும் வேலைக்கோ பாடசாலைக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டு குடும்ப வருமானம் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறனும் வீழ்ச்சியடைகின்றது.

பெரும்பாலான (90% அதிகமான) வீதி விபத்துக்கள் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படுகின்றன இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய பாதசாரிகள், துவிச்சக்கர வண்டி மற்றும் உந்துருளியில் பயணணிப்பவர்கள், பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

வீதி விபத்துக்களுக்கான காரணங்களையும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் சரியாக அறிந்து விழிப்புடன் செயற்படுவதன் மூலம் வீதி விபத்துக்களைக் குறைக்கலாம்.

அதி கூடிய வேகம் விபத்துக்களுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதோடு, விபத்து ஏற்படுமிடத்து பாதிப்பையும் அதிகரிக்கும். குறிப்பாக பாடசாலை, வைத்திய சாலை போன்ற பாதசரிகள் அதிகரித்த இடங்களில் வேகக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகின்றது. குடி போதையில் வாகனம் செலுத்துதல் சாரதிகளை மட்டுமின்றி ஏனையவர்களையும் பாதிக்கின்றது. தொலைபேசியை கையாண்ட வண்ணம் வாகனம் செலுத்துதல், உடல்நிலை குன்றிய நிலையிலோ தூக்க நிலையிலோ வாகனம் செலுத்துதல் சாரதியின் கவனத்தைக் குறைத்து விபத்துக்கு வழிகோலும்.

இவற்றைவிட வீதிச் சட்ட ஓழுங்குகளை மீறுதல், வீதிகளின் தரக்குறைவு மற்றும் வாகனங்களின் குறைபாடு காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தலைக்கவசம், ஆசனப்பட்டி போன்றவை கட்டாயமாக அணியப்பட வேண்டியவை. இவை விபத்துக்களின் போது பலத்த காயம் மற்றும் இறப்புக்கான சந்தர்ப்பத்தை வெகுவாக குறைக்கின்றன.

வீதி விபத்தின் போதான முதலுதவி:-

01. நீங்களும் அந்த விபத்தில் சிக்கி இருந்தால் முதலில் உங்களுடைய உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ளுங்கள் பின்னர் மற்றவர்களுக்கு உதவ முன்வாருங்கள்.

02. மற்றவர்களின் காயத்தின் தீவிரத்தை அறிந்து கொள்ளுங்கள்; உதாரணமாக தலையில் இருந்து குருதி வெளியேறுதல்.

03. அலறாமல், அசைவில்லாமல் இருப்பவர்களை முதலில் கவனியுங்கள். ஏன் எனில் அலறிக் கொண்டு இருபடபவர்களுக்கு சுவாசம் இருப்பதால் அவர்களை சற்று தாமதமாக சிகிச்சை செய்யலாம்.

04. அடுத்ததாக சுவாசம் இருக்கின்றதா என பாருங்கள். அடுத்ததாக நாடித்துடிப்பு இருக்கின்றதா என பாருங்கள்.

05.  உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்ச்சி செய்யுங்கள்.

06. மேலும் ஆபத்துக்கள் ஏதும் இருந்தால் அப்புறப்படுத்துங்கள். பாதுகாப்பான இடத் துக்கு நகர்த்துங்கள். அவரை தோளில் தட்டி கேள்வி ஏதும் கேளுங்கள் (உ+ம் :- பெயர்).

 07. அவர் கதைக்கவில்லை எனில் சுவாசப் பாதையில் அடைப்பு ஏதும் இருக்கலாம்.

08. வாயை திறந்து பாருங்கள் ஏதுவும் இருப்பின் அப்புறப்படுத்துங்கள்.

09. நாடித்துடிப்பை பரிசோதித்து பாருங்கள்.

10. நாடித்துடிப்பும் இல்லை எனில்; பாதிக்கப்பட்டவரின் மூக்கை பொத்திய வண்ணம் அவரின் வாயோடு உங்கள் வாயை இறுக்கமாக வைத்து சுவாசம் கொடுத்தது, பின் நெஞ்சின் நடுவில் அழுத்தம் கொடுக்க வேண்டும் (நெஞ்சு 5-6 cm உள்ளே செல்ல வேண்டும்).

11. இது இரண்டு சுவாசத்துக்கு 30 நெஞ்சு அழுத்தங்கள் என செய்ய வேண்டும்.
இதை சுழற்சி முறையில் தொடர்ந்து வைத்திய உதவி கிடைக்கும் வரை செய்ய வேண்டும்.

12. அருகில் வேறு யாராவது இருப்பின் அவர்களின் உதவியையும் பெறுவது நல்லது.
13. இதன் போது ஏதாவது காயங்களில் இருந்து குருதி பெருகிக்கொண்டிருப்பின் துணியால் கட்டி அமுக்கம் கொடுத்து நிறுத்துங்கள்.

14. எதனையும் பருகவோ உண்ணவோ கொடுக்க வேண்டாம்.

விபத்துக்குள்ளானவரை நகர்த்துதல் / வைத்தியசாலை கொண்டு செல்லல்:-

01. அனைவரிலும் முள்ளந்தண்டு முறிவு இருக்கலாம் என எண்ண வேண்டும்.
02. கடினமான பலகை போன்ற மட்டமான ஒன்றில் வைத்து கொண்டு செல்ல வேண்டும்.
03. காயமுற்றவர் நேராக படுத்திருப்பதை உறுதி செய்யுங்கள்.
04. தலையினுடைய அசைவை கட்டுப் படுத்துங்கள் (கைகளால் பிடித்தல்).
05. வைத்தியசாலையை அடையும் வரை சுவாசம் மற்றும் குருதிச் சுற்றௌட்டம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

 

Sources:-

01. https://srilankamirror.com/news/6874-a-road-accident-every-10-minutes

02. http://www.transport.gov.lk/web/index.php/statistics/national-council-for-road-safety.html

03. http://www.dailynews.lk/2017/07/12/local/121737/eight-die-each-day-road-accidents

04. http://www.jaffnamsu.com/archives/1572 

 

7,850 total views, 2 views today