கருவில் வளர்ந்த சேயினால் தாய்க்கு வந்த உயிராபத்து. Rh Positive Mother. Dr M.J.M. Suaib இன் 14/08/2018 நாட்குறிப்பேட்டில் இருந்து…

25 வயதுப் பெண் அடி வயிற்று வலியின் உச்சத்தால் சிறிது மயங்கியவளாக அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு வரப்பட்டாள்.
பெரும் எதிர் பார்ப்போடு முதல் குழந்தையை ஏந்தி வெறும் 7 வாரங்களே கடந்திருக்க, ஒரு நாளாக சிறிது சிறிதாக இருந்த அடி வயிற்றின் வலி சில நிமிடங்களுக்கு முன் மிகவும் அதிகரித்து வயிற்றைத் தொட முடியாதளவு தீவிரமாகி விட்ட அதே வேளை பெண்ணுறுப்பினூடாக இரத்தப் போக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

சோதனை செய்து பார்க்கையில்…

வலியோடு பாதி நினைவை இழந்தவளாக இருந்தாள். வயிற்றைத் தொடுகையில் மிகமிக அதிக வலியை உணர்ந்து துடித்தாள். உடல் மிகவும் வெளிரியிருந்தது. நாடித்துடிப்பு வீதமும் (34/min) இரத்த அழுத்தமும் (60/40mmHg) மிகவும் குறைந்திருந்தது. சொல்லப் போனால் மரணத்தை எதிர் பார்த்தவளாக இருந்தாள்…

நிலைமையை உணர்ந்து, இரத்தம் கொடுக்கப்பட்ட வண்ணம் அவசரமாக சத்திரசிகிச்சைக்கூடத்திற்கு எடுத்து வயிற்றைத் திறந்து பார்க்க…

வயிற்றுக்குழி முழுவதும் குருதியால் நிரம்பியிருந்தது. அண்ணளவாக 2 லீட்டருக்கு மேற்பட்டளவு குருதி ஓரமாக்கப்பட்டது. இடது பலோப்பியன் குழாய் வெடித்துச் சேதமாகி அவ்விடத்தினூடாக இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. பலோப்பியன் குழாய் வெட்டி நீக்கப்பட்டு இரத்த ஓட்டமும் நிறுத்தப்பட்டது… அப்பெண் ICU இல் போடப்பட்டார்.

இது ectopic pregnancy எனும் கரு கருப்பைக்கு வெளியே (இங்கு பலோப்பியன் குழாயில்) வளரும் நிலை. சாதாரணமாக கருக்கட்டப்பட்ட கரு கருப்பைக்குள்ளேயே வளர்ந்து சிசுவாக மாறும். மிகச் சில கட்டங்களில் அக்கரு கருப்பையை விட்டு வெளியே வளரத்தொடங்கும்.
மிகப்பொதுவாக பலோப்பியன் குழாயிலும் (97%), ஏனைய 3% ஆனவை சூலகம், கருப்பை வாய், வயிற்றுக்குழி எனுமிடங்களிலும் இது நிகழலாம்.

இப்பெண்ணுக்குப் போல் பலோப்பியன் குழாயில் இது ஏற்பட்டால், பலோப்பியன் குழாயின் உள்ளிடம் சிறியதாகையால் வளருங்கருவிற்கு இடம் போதாமலாக குழாய் விரியத்தொடங்கும். ஆனால் அக்குழாய் விரிய முடியாமல் போக (பொதுவாக 6 வாரங்கள் முதல்) வலியேற்படத் துவங்கும். தாமதமாகுமிடத்து அக்குழாய் வெடித்து இரத்தக் கசிவு ஏற்படும். அவ்விரத்தம் கருப்பையூடாக வெளியேயும் நேரடியாக வயிற்றுக் குழிக்குள்ளும் போகும்.
இதன் மூலம் மரணங்களும் சம்பவிப்பதுண்டு.

பலோப்பியன் குழாய் நீக்கப்பட்டால் மறு பலோப்பியன் குழாயூடாக மட்டுமே இனி சூலகத்திலிருந்து முட்டைக் கலம் கருப்பை நோக்கி வர முடியும். அப் பலோப்பியன் குழாயும் அசாதாரண நிலையிலிருப்பின் பிள்ளைப் பாக்கியத்தை இழக்கவும் நேரிடலாம்.

இந்நிலையை குழாய் வெடிக்குமுன் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குழாயையும் பாதுகாக்கலாம்.

கருத்தரித்த ஆரம்ப நாட்களில், பொதுவாக 5 வாரங்களிலிருந்து, அடி வயிற்று வலி ஏற்படின் உரிய முறையில் வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.

1,850 total views, 2 views today