பிரசவத்தின் பின் தாய்க்கு உளவியல் ஆதரவின் அவசியம். Psychological support for pregnant mothers after delivery.

Postpartum Blue & Postpartum Depression

 

குழந்தையைக் கழுத்தை அழுத்திக் கொன்ற தாய்` இப்படி ஒரு செய்தியை ஒருதடவையாவது வாசித்து `இவளுக்கெல்லாம் எதுக்கு குழந்தை? டாஷ் டாஷ்… என்று கட்டாயம் கெட்டவார்த்தையால் திட்டி இருப்பீர்கள். 💓👹

அண்மையில் கூட ஒரு தாய் வலி நிவாரணியை உட்கொள்ள கணவன் அனுமதிக்காததால் குழந்தையைக் கொலை செய்தாள் என்ற செய்தியை வாசித்தேன்.👺

இப்படிப்பட்ட பெண்களைத் திட்டும் முன் நாம் முதலில் திட்ட வேண்டியது அந்தப்பெண்ணைச் சுற்றி இருப்பவர்களை.

ஏன் இவர்கள் இப்படிப் பெற்ற குழந்தையைக் கொலை செய்கிறார்கள்?

By Dr S Sivagnanam (Consultant VOG)

குழந்தை பிறந்த பின் அநேகமான பெண்களுக்கு உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும்.

Postpartum blue என்றொரு நிலை உள்ளது. இது குழந்தை பிறந்த பெண்ணின் மனதில் ஏற்படும் சிறிய சஞ்சலம். சம்பந்தமில்லாமல் அழுவது, சம்பந்தமில்லாமல் கவலைப்படுவது, சின்னச் சின்ன விடயங்களுக்கு எரிந்து விழுவது போன்ற சம்பவங்கள் இந்த நிலையில் ஏற்படும்.

இது அநேகமான பெண்களுக்கு ஏற்பட்டு சிறிது காலத்திலேயே மறைந்துவிடும். இதற்குத் தேவையான ஒரே மருந்து கணவனினதும், உறவினரதும் அன்பு.

இதைவிட தீவிரமான Postpartum depression என்றொரு நிலை இருக்கிறது. இந்த நிலை ஏற்பட்டு சரியாக கவனிக்கப்படாமல் விடும்போதுதான் தற்கொலை செய்தல், குழந்தையைக் கொல்லுதல் போன்ற சிக்கலான நிலைக்குப் பெண்கள் செல்கிறார்கள்.

இந்த நோயின் அறிகுறிகள் அநேகமானவை மேலே சொன்ன Posatpartum blue என்ற நிலையின் அறிகுறிகளை ஒத்தவை என்றாலும் அவை தீவிரம் கூடியவையாகவும் நீண்ட நாட்கள் நிலைத்து இருப்பவையாகவும் இருக்கும்.

இவ்வாறு இரண்டு நிலையையும் வேறு பிரித்து அறிவது சாதாரண மக்களுக்கு கஷ்டமானவை என்பதால் , பின்வரும் அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டால் தற்கொலை, குழந்தையைக் கொலை செய்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்,

அளவுக்கதிகமான பயம்
அதிகமான மன அழுத்தத்தை உணர்தல்
தேவையில்லாத பயத்துடன் நெஞ்சு படபடப்பு
சின்ன சின்ன விடயங்களுக்கே எரிந்து விழுந்து கோபப்படுதல்
தூக்கமின்மை
அதிகமாக உணர்ச்சிவசப்படுதல்
தன்னைப்பற்றி யாரோ தப்பாக பேசுவது போல உணர்தல்
தன்னை அல்லது குழந்தையை யாரோ கொலை செய்ய முயற்சிப்பது போல உணர்தல்
செத்துவிடலாம் போன்ற எண்ணம் தோன்றுதல்
குழந்தை ஒரு பாரமாக உணர்தல்
குழந்தையைப்பார்த்து கோபப்படுதல்

குழந்தை பிறந்து முதல் வருடத்தினுள் மேலே சொன்ன ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் செல்ல வேண்டும்.

எமது சமூகத்தில் இருக்கும் பெரிய பிரச்சினை இவ்வாறான பிரச்சினைகளைச் சொன்னால் பைத்தியக்காரி என்று பட்டம்கட்டி விடுவார்கள் என்ற அச்சம். இது உண்மையும் கூட, ஒரு மனநோயாளியை நம் சமூகம் எவ்வாறு நடத்துகின்றது என்று நான் சொல்லவேண்டியதில்லை.

உள நோய் என்பதும் மற்றைய நோய்களைப்போல ஒரு நோய். அவ்வளவுதான்.

ஆனால், மற்றைய நோய்கள் பிரதானமாக ஒருவரின் உடம்பில் இருக்கும் சிக்கலினாலேயே ஏற்படும். ஆனால் உளநோய்க்கு இந்தச் சமூகத்தில் இருக்கும் சிக்கல்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இதனால் ஒரு சமூகமாக ஒருவரை உளநோயாளியாக்கியதுக்கு நாம் நம்மளைத்தான் கேலி செய்யவேண்டுமே தவிர அந்த நோயாளியை அல்ல.

அதிலும், குழந்தை பிறந்த பின் ஏற்படும் இந்த நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது சுற்ரி வர இருக்கும் பொறுப்பற்ற சூழல்.

மனைவி இப்போதுதான் குழந்தை பெற்றுள்ளாள், இரவிரவாக கண்முழித்து குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள் என்ற அவளின் கஷ்டங்களை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் அவளை மேலும் அழுத்தத்துக்கு ஏற்படுத்துவதுதான் இந்த நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம்.

அதேபோல் குழந்தையைப் பார்க்கப்போகின்றோம் என்ற பேரில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் உறவினர்களும், அயலவர்களும் கூட இந்த நிலமை ஏற்படுவதற்கான முக்கிய பொறுப்பினை ஏற்க வேண்டும்.

முந்தைய காலத்தில் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது குழதையையும் தாயையும் கவனிக்க பலர் இருந்ததால் தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைத்து, வருகின்ற உறவினர்களோடு நேரம் ஒதுக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

ஆனால் இப்போது நிலமை வேறு. குழந்தை பெற்ற தாய் இரவு முழுக்க கண்முழித்துவிட்டு , பகலில் குழந்தை கண்ணயரும் நேரம் பார்த்து, தானும் கொஞ்சம் நித்திரைகொள்ளுவோம் என்று நினைக்கும்போது, ஜோன்சன் பேபிகிறிமோடு கதவைத்தட்டும் உறவினர்களின்மீது எவ்வளவு ஆத்திரம் வரும்⁉️

அதுமட்டுமில்லாமல், குழந்தையைப்பார்க்கப்போகின்றவர்கள் போய் சும்மா குழந்தையைப்பார்த்துவிட்டு மட்டும் வருவதில்லை. அந்தக்கால நடமுறைகள் என்ற பெயரில் பல அறிவுரைகளைக்கூறி அந்தத்தாய்க்கு இன்னும் சிக்கல்களை உருவாக்கி அவளை கிட்டத்தட்ட மன நோயாளியாக்கி விட்டு வருபவர்கள் இவ்வாறு குழந்தையைப்பார்கப்போகின்றேன் என்ற பெயரில் போய் தொந்தரவு செய்பவர்களே.

ஆகவே , இனிமேல் யாருக்கும் குழந்தை பிறந்தவுடன் ஓடிப்போய் அவர்களை தொந்தரவு செய்யாமால் , ஓரிரண்டு கிழமைகள் போனபின், குழந்தைபெற்ற தாயோடு முன்னமே பேசிவிட்டு அவர் ஆறுதலாக இருக்கும் நேரம் பார்த்து சென்று , குழந்தை அழகாக உள்ளது போன்ற சில வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு வாருங்கள். தேவையில்லாமல், பிள்ளை குட்டியா, நிறைகாணாம இருக்கான், நோ ஞ்சானாக இருக்கான், கருப்பா இருக்கான் போன்ற உங்கள் டொக்டர் வேலைகளை குழந்தை பிறந்த அழுத்தத்தில் இருக்கும் தாயிடம் காட்டவேண்டாம். அதேபோல் பிறந்த குழந்தையை உடனேயே மற்ற‌வர்கள் தூக்கிக் கையாள்வதையும் இப்போது அநேகமான பெண்கள் விரும்புவதில்லை. ஆகவே முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு அம்மாவின் மனநிலையை அறியாமல் குழந்தையை அதிகம் கையாளவேண்டாம்.

அடுத்து கணவன் குடிப்பதை குழந்தை பிறந்து கொஞ்ச நாளைக்கேனும் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் அம்மா இரவிரவாக கண்முழித்து இருக்க, கணவன் இரவு 12 மணிமட்டும் குடித்துவிட்டு விழுந்து படுத்தால் அவளுக்கு அது எவ்வளவு அழுத்தத்தைக்கொடுக்கும் என சிந்தித்துப்பாருங்கள்.

ஆகவே குழந்தை பிறந்துவிட்டது, வா மச்சாம் பார்ட்டி வை என்று அப்பாவானவரை அழைப்பதை முதல் சில மாதங்களுக்கேனும் நண்பர்கள் தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு கணவனும் தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், குழந்தையைப்பொறுப்பெடுத்துவிட்டு அம்மாவை கொஞ்சம் ஓய்வெடுக்கவிட்டாலே அநேகமான உளவியல் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

அதேபோல் குழந்தை பிறந்து கொஞ்சநாளைக்கு தேவையில்லாத குடும்ப பிரச்சினைகளையும், பொருளாதார பிரச்சினையும் குழந்தை பெற்றவ தாயிடம் கொடுக்காமல் கணவன் அல்லது குடும்பத்தில் வேறு ஒருவர் பார்த்துக்கொள்ளவேண்டும்.

குழந்தை பிறந்தபின் அவளின் உடல்ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படலாம். பால் கட்டுதல் என்பது முலைகளில் பால் தேங்குவதால் ஏற்படும் கடுமையான வலியாகும். இது எப்படி இருக்குமென்றால், ஒரு 5 கிலோ கல்லை ஒரு ஆணின் விதைப்பையில் கட்டித்தொங்கவிட்டு ஓடவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். அதேபோல் குழந்தை பிறப்பின் போது ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் வலி இருக்கலாம், கிருமித்தொற்று ஏற்படலாம். இந்த வலிகள் ஒரு பெண்ணின் அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும். இவற்றுக்கெல்லாம் இப்போது மருத்துவத்தில் போதிய சிகிச்சைமுறை உள்ளது. இந்த வலிகளை பூரணமாக குறைத்துவிடுமளவுக்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.

ஆகவே இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டால், அந்தக்கால நடைமுறை என்ற பெயரில் பாட்டி வைத்தியம் செய்து அந்தப்பெண்ணை கஷ்டப்படுத்தாமல் உடனடியாக வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
அண்மையில் இந்தியாவில் குழந்தையைக்கொலை செய்த பெண்ணுக்கும் இந்த பால் கட்டுதலே ஏற்பட்டுள்ளது. அவளது தீராத வலிக்கு வைத்தியர் மருந்து கொடுத்துள்ளார். ஆனால் கணவன், அந்த மாத்திரையால் பிள்ளைக்கு பிரச்சினை வரும் என்று அந்தப்பெண்ணை மாத்திரை எடுக்காமல் தடுத்துள்ளார். அதனால் அதிகரித்த வலியினால் ஏற்பட்ட மன உளைச்சலே அவள் குழந்தையைக்கொலை செய்யக்காரணமாகும்.

கர்ப்பிணிக்கும், பாலுட்டும் தாய்க்கும் எப்போது குழந்தையைப்பாதிக்காத மருந்துகளையே கொடுப்போம். ஆகவே பேஸ்புக்கில் வருகின்ற தகவல்களை நம்பி இப்படிப் பெண்களை வலியோடு போராடவிடாதீர்கள்.

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

நிந்தவூர் இரட்டை குழந்தைகள் கொலை. – அதிர்ச்சியளிக்கும் தாயின் வாக்குமூலம். இதனை Click செய்க.

586 total views, 1 views today