பப்பாசி கருக்கலைப்பை உண்டாக்குமா? முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல. Papaya abortion Fact Check

முன்னோர்களிடத்தில் புரையோடிப் போய் இருக்கும் ஒரு நம்பிக்கை பப்பாசி கருக்கலைப்பை உண்டாக்கும் என்று. பல சினிமாக்களிலும் பப்பாசி கொடுத்து கருக்கலைப்பு ஏற்படுத்துவதாக காட்சிகள் காட்டப்பட்டிருக்கும் இவற்றின் விஞ்ஞான அடிப்படை என்ன?

பப்பாசியில் பழமும் காயும் உள்ளது.

மஞ்சள் தோல் உடைய பழுத்த பப்பாசி:-

இதில் அதிகளவான இயற்கையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
1. Beta- Carotene
2. Choline
3. Fiber
4. Potassium
5. Vitamins A,B & C

பச்சைத் தோல் உடைய காய் பப்பாசி:-
இதில் அதிகளவான
1. Latex
2. Papain உள்ளது.

2000ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஒன்றின்போது காய் பப்பாசி யின் latex எனும் பதார்த்தம் பிரித்தெடுக்கப்பட்டு கருத்தரித்த எலிகளுக்கு செலுத்தப்பட்டு அவதானிக்கப்பட்டது. இதன்போது எலிகளின் கருப்பை அதிகளவான சுருக்கத்திற்கு உட்பட்டு அதிர்ச்சி அளிக்கும் வகையில் abortion ஏற்பட்டது. (ஆதாரம் 01)

British Journal of Nutrition இல் 2002 இல் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் போது கருத்தரித்த எலிகள் நான்கு குழுக்கள் ஆக்கப்பட்டது. அவற்றில் ஒரு குழுவுக்கு காய் பப்பாசியின் latex என்னும் பதார்த்தமும் மற்றைய குழுவுக்கு பப்பாசிப் பழச்சாறும் மூன்றாவது குழுவுக்கு நீர் மாத்திரம் வழங்கப்பட்டது.
இவற்றில் நீர் வழங்கப்பட்டவை மற்றும் பழுத்த பப்பாசி பழச்சாறு வழங்கப்பட்ட கருத்தரித்த எலிகளில் மாற்றங்கள் அவதானிக்கப்படவில்லை. மாறாக காய் பப்பாசி வழங்கப்பட்ட எலிகளில் அதிகளவான கருப்பை சுருக்கம் அவதானிக்கப்பட்டது. கருக்கலைப்பும் ஏற்பட்டது. 
இதனால் காய் பப்பாசி மற்றும் குறைவாக பழுத்த பப்பாசி  ஆபத்தானது என முடிவெடுக்கப்பட்டது. இருந்தபோதும் பழுத்த பப்பாசியால் பிரசவத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து பற்றி மேலும் ஆய்வுகள் தேவை என பரிந்துரைக்கப்பட்டது. (ஆதாரம் 02)

இதேபோல் பப்பாசி விதைகள் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு பரிசோதனையிலும் கருக்கலைப்பு க்கான வாய்ப்பு அறியப்பட்டுள்ளது. அதே நேரம் மாதவிடாய் போன்ற இரத்த வெளியேற்றம் ஏற்படுகிறது.(ஆதாரம் 03)

முடிவாக பப்பாசி காயில் உள்ள Latex எனும் பதார்த்தம் கருப்பை சுருக்கத்தை தூண்டுகிறது. இதில் அடங்கியுள்ள Papain எனும் பதார்த்தம் உடலில் உள்ள prostaglandin எனும் ஓமோனை ஒத்த செயற்பாட்டை கொண்டிருப்பதால் கருப்பை சுருக்கத்தை தூண்டி membrane களை வலுவிழக்கச் செய்கின்றன. (இதனால்தான் பப்பாசி மாட்டிறைச்சியை மென்மையாக்க சமையலின்போது பயன்படுகிறது.)
அதே நேரம் இந்த papain எனும் பதார்த்தம் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

பப்பாசியை கருத்தடைக்கு பயன்படுத்தும் வழக்கம் தெற்காசிய நாடுகளிலேயே காணப்படுகிறது.
இருந்தபோதும் இந்நாடுகளில் கருக்கலைப்பானது Criminal குற்றமாக கருதப்படுவதால் மனிதர்களில் இதனை சோதிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறது. இருந்தபோதும் 1994 இல் Dr தர்மலிங்கம் செந்தில் மோகனின் அனுபவ பகிர்வு மூலம் இலங்கையில் தொடர்ந்து 3 நாட்களுக்கு காய் பப்பாசியை உட்கொண்டு கருக்கலைப்பு செய்வதாக அனுபவ ரீதியாக அறிவதாக தெரிவித்துள்ளார். (ஆதாரம் 04) (இக்கருத்து எந்தவித விஞ்சான அடிப்படை ஆய்வுமுறையும் இன்றி மருத்துவ உலகின் வேத புத்தகமாகிய PubMed இல் பிரசுரிக்கப்பட்டிருப்பது அதிசயமே.)

Take Home Message:-

பப்பாசிப்பழம் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் காய் பப்பாசியானது கர்ப்பமுற்ற தாய்மாருக்கு ஆபத்தானது.

பப்பாசி பழங்கள் தற்போது இயற்கையாக கனியாமல் செயற்கை முறையில் கனிய செய்யப்படுவதால் அவை காயா பழமா என்பதில் நம்பகத் தன்மையும் கேள்விக்குறியானது.

எனவே கருவுற்ற நிலையில் பப்பாசியை தவிர்த்து வேறு பழங்களை உண்பது ஆரோக்கியமானது.
எவ்வளவு பப்பாசி உண்டால் கரு கலையும் என்பதட்கு ஆதாரங்கள் இல்லை. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். பப்பாசி உட்கொண்டு அரைகுறையாக கரு கலைந்து பின்னர் சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டிய சம்பவங்கள் நடந்த வரலாறுகளும் உண்டு.

3,919 total views, 1 views today