Mucormycosis, or “black fungus” கருப்புப் பூஞ்சை அபாயம்
🚨🚨🚨360 டிகிரி பார்வை
By: Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

ம்யூகார் மைகோசிஸ் என்பது கருப்பு நிறத்தில் வாழும் பூஞ்சையாகும்
இந்த பூஞ்சைத் தொற்றானது நல்ல உடல் நிலையில் உள்ள நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் மனிதர்களுக்கு ஏற்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குன்றிய நிலையில் உள்ள மக்கள், வெளியே சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் & பரவி இருக்கும் இந்த பூஞ்சையின் நுண்ணியிர் விதைகளை (Spores) சுவாசிப்பதன் மூலம் உள்ளே இழுத்துக்கொள்ளும் போது
அவர்களுடைய
🚨மூக்கு
🚨நாசி
🚨மேல் அன்னம்
🚨சைனஸ் எனும் முகத்தில் உள்ள காற்றறைகள்
🚨கண்கள்
ஆகிய முகத்தின் பகுதிகளில் தொற்றிக்கொள்ளும்.

இவ்வாறு தொற்றிக் கொள்ளும் இந்த பூஞ்சையை விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல் விட்டால்
கண் பார்வை பறிபோகலாம்
மூக்கு கண்கள் போன்ற பகுதிகளை அறுவைசிகிச்சை செய்து நீக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இன்னும் காலதாமதம் செய்தால் மரணம் எய்தும் நிலையும் ஏற்படலாம்
எனவே இந்த தொற்றை உடனே கண்டறிந்து சிகிச்சை எடுப்பது முக்கியம்.

யாருக்கெல்லாம் இந்த கருப்புப் பூஞ்சை ஏற்படலாம்?
📣 கட்டுப்பாடில்லாத ரத்த சர்க்கரை அளவுகளைக் கொண்டிருக்கும் நீரிழிவு நோயாளிகள்.
📣 சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள். அதிலும் கொரோனா தொற்று குணமாக ஸ்டீராய்டு எனும் எதிர்ப்பு சக்தியை குன்றச்செய்யும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டவர்கள்.
📣 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையில் இருப்பவர்கள்.
📣 வோரிகோனசோல் எனும் பூஞ்சை தொற்றை தடுக்கும் மாத்திரையை அதிக காலம் உட்கொள்பவர்கள்.
📣 அதிக நாட்கள் மருத்துவமனை ஐசியூவில் இருந்து சிகிச்சை பெற்றவர்கள் / ஆக்சிஜன் சிகிச்சை பெற்றவர்கள்.

என்ன அறிகுறிகள் இருந்தால் உடனே உஷாராக வேண்டும் ?
மேற்கூறிய “ரிஸ்க்” இருக்கும் நபர்களுள்
முக்கியமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமானவர்கள் அல்லது சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக ஸ்டீராய்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு
கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால் உடனே உஷாராக வேண்டும்.

1. மூக்கடைப்பு
2. மூக்கில் இருந்து கருப்பு/ரத்தம் போன்ற திரவம் ஒழுகுதல்
3. ஒரு பக்க கன்னத்தில் நல்ல வலி
4. மேல் அன்னம் மற்றும் மூக்குக்குள் கருப்பாக புண் தோன்றுவது
5. திடீரென தோன்றும் பல்வலி/பல் ஆடுவது/ வாய்ப்பூட்டு வலிப்பது
6. கண் பார்வை பறிபோதல்
7. கண் பார்வை இரண்டாகிப்போதல்
8. கண்பார்வை மங்குதல்
9. மேற்கூறியவற்றுடன் காய்ச்சல்
10. திடீரென மூச்சு இளைப்பு
11.இருமலில் சளியுடன் ரத்தம் வருதல்
12.நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்படுதல்

இங்கே ரிஸ்க் என்று குறிப்பிடப்படாதவர்கள் அச்சமின்றி இருக்கலாம்.
மேலும் இந்த கருப்பு பூஞ்சைஅனைத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கும்  ஏற்படப்போவதில்லை.
நீரிழிவு ஏற்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்தவர்களும் பீதி நிலைக்குச் செல்லத்தேவையில்லை

இதுகுறித்த விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். இது அரிதான நோய் மட்டுமே.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. It’s a non contagious disease.
எனவே தயவு செய்து சுய தனிமையோ அல்லது ஒதுக்குதலோ செய்து விடக்கூடாது.

அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே பிடித்து விட்டால்
உடனடியாக சிகிச்சை கொடுத்து
உயிரையும் உறுப்புகளையும் காப்பாற்றி விட முடியும்.

இந்த தொற்று ஏற்படாமல் எப்படி பாதுகாத்துக் கொள்வது ?
ரத்த சர்க்கரை அளவுகளை சரியாக பராமரிப்பது முக்கியம்.
ஸ்டீராய்டு மருந்துகளை தேவையான மக்களுக்கு தேவையான அளவில் தேவையான நேரம் மட்டும் வழங்குவது
ஆக்சிஜன் தேவைப்படும் மக்களுக்கு
ஈரப்பதம் ஏற்றும் Humdifier என்ற பாகத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான நீரை உபயோகிக்க வேண்டும்.
அந்த பாகத்தை வாரம் ஒருமுறையேனும் நன்றாக சோப் போட்டு கழுவி சுத்தம் செய்து நீரை சரியான அளவில் நிரப்பி உபயோகப்படுத்த வேண்டும்.

செய்யக்கூடாதவை எவை?
அபாய அறிகுறிகளை புறக்கணித்தல் கூடாது.
இந்த காலத்தில் மூக்கடைப்பு மூக்கொழுகுதல் போன்றவற்றை வைத்து பாக்டீரியா மூலம் வரும் சைனஸ் என்று தவறாக நினைத்து விடக்கூடாது.
இது ம்யூகாராக இருக்கலாம் என்ற எண்ணம் வேண்டும்.
மருத்துவர் KOH STAINING முறைப்படி பூஞ்சையை கண்டறியும் பரிசோதனையை பரிந்துரைத்தால் உடனே செய்ய வேண்டும்.
முக்கியமான காலகட்டத்தை வீணடிக்க கூடாது.

இந்த தொற்றுக்கு சிகிச்சை என்ன?

காதுமூக்கு தொண்டை நிபுணர்
அறுவை சிகிச்சை நிபுணர்
பல் அறுவை சிகிச்சை நிபுணர்
கண் அறுவை சிகிச்சை நிபுணர்
மயக்கவியல் நிபுணர்
பொது மருத்துவ நிபுணர்
நுண்ணியிரியல் சிறப்பு நிபுணர்
உயிர் வேதியியல் நிபுணர் என்று
பல்துறை வல்லுனர்கள் அடங்கிய குழு இந்த நோயை குணப்படுத்த உதவும்,

நீரிழிவை கட்டுக்குள் வைப்பது
முடிந்த அளவு ஸ்டீராய்டு தேவையை குறைப்பது/ முடிந்தால் மருத்துவர் பரிந்துரையில் நிறுத்துவது
இதற்கென பூஞ்சை தொற்றை தடுக்கும் முன்கூட்டிய மருந்துகள் கிடையாது. யாரும் முயற்சி செய்ய வேண்டாம்
சரியான அளவில் உடலில் நீர்ச்சத்து பராமரிப்பு
Liposomal Amphotericin B மருந்து சிறப்பாக இந்த தொற்றுக்கு எதிராக வேலை செய்யும்
இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இல்லை
பூஞ்சை தொற்றுக்கு எதிரான சிகிச்சையை 4 முதல் 6 வாரங்களுக்கு வழங்கப்படும்
நோயின் தன்மையை கண்டு சிகிச்சையில் முன்னேற்றத்தைக் காண சிடி ஸ்கேன் பரிசோதனை அவ்வப்போது செய்யப்படும்.
கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்த
அனைவருக்கும் இந்த தொற்று ஏற்படாது
எனவே பதட்டம் தேவையில்லை
அச்சம் தேவையில்லை
எச்சரிக்கை உணர்வு போதுமானது.
தேவையின்றி வெளியே செல்லாதீர்கள்.

கொரோனாவை வென்ற மக்களே
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளே
ஒருமுறை உபயோகித்த முகக்கவசங்களை துணிக்கவசமாயின் நல்ல முறையில் துவைத்து மறு உபயோகம் செய்யுங்கள்
மேலும் சர்ஜிகல் மாஸ்க் மற்றும் N95 மாஸ்க்களை தொடர்ந்து மறு உபயோகம் செய்யாதீர்கள் . அதன் வழியிலும் இந்த பூஞ்சை பரவ வாய்ப்பு உள்ளது .
முறையாக மறு சுழற்சி செய்யவும்.

எனவே மக்களே
மேற்சொன்ன கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளை உடனே அறிந்து கொண்டு
மருத்துவமனையை அடைந்திட வேண்டும்
காலதாமதம் ஆபத்தை விளைவிக்கும்.

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Sri Lanka Situation Source: Madawala News:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிருமி அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்த கிருமி, கொவிட் வைரஸ் தொற்றுடன் எவ்வாறு இணைந்தது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நோய் அம்பாறை பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

1,579 total views, 2 views today