கை கால்களை முறிக்கும் கா டிங்கா பெப்போ எனும் கெட்ட  ஆவியாக அறியப்பட்ட Dengue இன் வரலாறும் வைத்தியமும்.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.

பருவப் பெயர்ச்சிக் காலம் நமக்கு கிடைத்த ஒரு வரம். அது நமக்கு மழை கொண்டுவரும். நிறைய ஃபேஸ் புக் திடீர்க் கவிஞர்களையும், இன்ஸ்டன்ட் புத்தக வாசிப்பர்களையும், அமெச்சூவர் போட்டோகிராபர்களையும் கொண்டு வந்து விடும்.

மழைச்சாரல், யன்னலோரம், திறந்த புத்தகம், காப்பி கப் என நிரம்பி வழியும் டைம் லைன் போஸ்ட்களின் தொல்லைகள் போலவே நுளம்புகளின் தொல்லைகளும் நம்மை ஆக்கிரமித்து விடும்.

நுளம்பு என்றாலே நமக்கெல்லாம் ஞாபகத்திற்கு வருவது டெங்கு தான்.
ஆனால் இற்றைக்கு ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு அந்த ஞாபகம் மலேரியாவாக இருந்தது. அதற்கும் முதல் வாழ்ந்தவர்களுக்கு பேய்களும் பிசாசுகளுமாய் இருந்தது🤔. ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு வகை தொல்லைகள். ஒவ்வொரு ஞாபகங்கள்.

நுளம்புகளால் பரப்பப்படும் ஆட்கொல்லி நோய்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 20க்கு மேல் இருக்கின்றன. Malaria, Dengue, West Nile Disease, Chikungunya, Yellow fever, Filariasis, Tularemia, Dirofilariasis, Japanese Encephalitis, Saint Louis Encephalitis, Western Equine Encephalitis, Eastern Equine Encephalitis, Venezuelan Equine Encephalitis, Ross River Fever, Barmah Forest Fever, La Crosse Encephalitis, and Zika Fever, Keystone Fever, Rift Valley Fever என உலகம் முழுக்க நுளம்புகளினால் பரப்பப்படும் நோய்களினால் எண்ணிக்கை பரந்து விரிந்து செல்கிறது. விரிவஞ்சி அந்த லிஸ்ட் தவிர்க்கப்படுகிறது.

இந்த திகதியிலும் ஒவ்வொரு ஆண்டும் நுளம்புகள் மூலம் காவப்படும் நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் தொகை 700 மில்லியன்களை தொடுகிறது. அவர்களுள் 1 மில்லியன் பேர் இந்த நோய்த் தாக்கங்களால் இறந்தும் போகின்றனர். சத்தமில்லாமல் ஒரு பெரும் யுத்தமே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் மீது நுளம்புகள் கொண்ட அந்த ஒரு தலைக் காதலே இவ்வளவு இறப்புக்களுக்கும் காரணமாய் அமைந்திருக்கிறது.

நுண்ணுயிரியல், அதி நவீன மருத்துவ சாதனங்கள், எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோப் போன்றவை கண்டறியப்பட்டாத அந்த காலகட்டத்தில் இந்த நுளம்புகள் மூலம் பரவும் இந்த வகை வைரஸ், பக்டீரியா,பரசைட் நோய்கள் எல்லாம் பேய், பிசாசுகள், ஜின்களின் தலையில் கட்டப்பட்டவைகளாகவே இருந்திருக்கின்றன. அதனால் தான் அன்று பேய் அடித்து சாகுபவர்கள் எல்லோரும் இரத்தம் கக்கி செத்துப் போயிருக்கிறார்கள்.🤭

சீன மருத்துவ குறிப்புகளில் நுளம்புகள் மூலம் பரவும் காய்ச்சல்களின் வகை குறித்தும் அவை ஏற்படுத்தும் தீவிர உடம்பு வலி குறித்தும் பதிவுகள் காணப்படுகின்றன. (Chinese medical encyclopedia from the Jin Dynasty – 265–420 AD). ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னைய டெங்கு பற்றிய முதலாவது குறிப்புகளாக இவை அறியப்பட்டிருக்கின்றன.

எனினும் 1778ல் ஸ்பெயினில் பரவிய தீவிர உடல் வலியுடன் கூடிய ஒரு வகை காய்ச்சல் “டெங்கு” என முதன் முதலாக அழைக்கப்பட்டது. ஆபிரிக்க ஸ்வாஹிலி மொழியில் கை கால்களை முறிக்கும் கெட்ட ஆவி எனும் பொருள் கொண்ட “கா டிங்கா பெப்போ” (Swahili phrase “Ka-dinga pepo” – cramp-like seizure caused by an evil spirit) என்ற வார்த்தையில் இருந்தே இந்த “டெங்கு” எனும் வார்த்தை ஸ்பானியர்களுக்கு கிடைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதிக உடல் வலியை உண்டாக்குவதால் “எலும்பை நொறுக்கும் காய்ச்சல்” (Bone Breaking Fever) என்ற பெயரும் பழைய மருத்துவ நூல்களிலே பாவிக்கப்பட்டிருக்கிறது.

கெட்ட ஆவி என்ற பெயருக்கு ஏற்றாற் போலவே அதிக காய்ச்சல், அதிக உடல் நோவு, வயிற்று வலி, உடல் சோர்வு, பசியின்மை, எந்நேரமும் அலட்டிக் கொண்டிருத்தல் போன்றவை தான் டெங்குவின் அறிகுறிகள். இரத்தக்கசிவு, குறைவான அளவு சிறுநீர் வெளியேறுதல், தலை சுற்று, மயக்கம் போன்றவை இந் நோயின் ஆபத்தான சுட்டிகள்.

என்ன தான் பிசாசாக இருந்தாலும் அநேகம் பேருக்கு இது கொரோனாவை போல சாதாரண வைரஸ் காய்ச்சலாக வந்து தானாகவே சரியாகி விடும். சில நேரம் மட்டுமே உயிரை காவு கொள்ளும். அதிலும் குறிப்பாக தீவிர நோயாக உருவெடுப்பதும் உயிர்ப் பலி கேட்பதும் சிறுவர்களையும் கர்ப்பிணிகளையும் தான்.

1906 ஆம் ஆண்டு இயற்கையியலாளரான
(Australian Naturalist) Thomas Lane Bancroft என்பவரே, டெங்கு நோய் Aedes aegypti வகை நுளம்புகளால் பரவுவதை முதன் முதலில் கண்டறிந்தார். இருந்தும் 1943ஆம் ஆண்டளவில் தான் டெங்கு வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தான் “கா டிங்கா பெப்போ” எனும் கெட்ட ஆவி பற்றிய புரிதல்களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது.

A,B,C,D அல்லது 1,2,3,4 என நான்கு வகை டெங்கு வைரஸ்கள் இது வரைக்கும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு வகை டெங்கு வைரஸ் தாக்கிய பின் அடுத்த வகை தாக்கினால் அடுத்த முறை அதிக பாதிப்பை ஏற்படுத்தும், உயிராபத்தை ஏற்படுத்தும் நோயாக உருவெடுப்பது தான் இதன் விசேடமாக இருக்கிறது. இதுவே வெவ்வேறு பிரதேசங்களில் காலத்துக்கு காலம் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. ஆகவே முதலாவது தரம் சாதரணமாக டெங்கு வந்து சுகமானவர்கள் இரண்டாம் தரமும் டெங்கு வரும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.

டெங்கு நோய் காலங்களில் வைத்தியர்களின் மொபைல் எப்போதும் அலறிக்கொண்டே இருக்கும். வாட்டுகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஒரு கட்டிலை இருவர், சில வேளைகளில் மூவர் ஷயார் பண்ணிக்கொண்டிருப்பர். ஒரே கட்டிலில் கெசல்வத்தை சுமதியின் ஐந்தாவது பிள்ளையும், சின்னமென் கார்டன் Mrs Diana வின் ஒரே ஒரு பிள்ளையும் ஒன்றாய் இருக்கும் சம தர்மத்தை இங்கே காணக் கிடைக்கும்.

இந்தக் காலத்தில் இரவு முழுக்க நித்திரை முழிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்தியாலமும் பிள்ளைகளை பரிசோதிக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு சிறுநீர் கழிக்கிறார்கள், அவர்களது நாடித் துடிப்பு எப்படி, பிரஷர் எப்படி என்பதை அளக்க வேண்டும். ஆக மொத்தத்தில் இக்காலத்தில் தட்டான் தங்கத்தை நிறுப்பதில் காட்டுகிற கவனத்தை விட டெங்கு நோயாளிகளின் யூரினை அளப்பதில் எங்களுக்கு இருக்கிற கவனம் மிக முக்கியமானதாக இருக்கும். யூரினுக்கு இருக்கின்ற மதிப்பும், ஒரு உயிருக்கு இருக்கின்ற மதிப்பும் நிறையப் பேருக்கு விளங்குவது இந்தக் காலத்தில் தான்.

உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி உலகம் முழுவதும் ஏறத்தாழ 390 கோடி மக்கள் நம்மைப் போல டெங்கு பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்தான பகுதியில் வசிக்கின்றனர். 40 கோடி டெங்கு நோய்த்தொற்றுகள் ஒவ்வொரு வருடமும் பதிவாகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 15 மடங்கு இந்த நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மனிதர்களின் அசமந்த போக்கும் காடழிப்புமாக அறியப்பட்டிருக்கிறது.

மற்ற வைரஸ் நோய்களைப் போலவே டெங்குவையும் PCR முறைப்படி கண்டறியலாம். இவைகளை கண்டறிவதற்கான Rapid Test kits எல்லா இடங்களிலும் பாவனையில் உள்ளன. #NS1 Antigen Detection Test மூலம் காய்ச்சல் வந்த முதல் இரண்டு மூன்று நாட்களிலயே இது டெங்கு காய்ச்சல் தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அது போல நோய் எதிர்ப்புப் புரதங்களான IgG, IgM Antibodies சோதனைகள் மூலம் இதை உறுதிப்படுத்தலாம். இருந்தாலும் இந்த அன்டிபொடி பரிசோதனைகளை செய்வதற்கு ஆறாம், ஏழாம் நாள் வரை காத்திருக்க வேண்டும்.

இதுவும் கொரோனாவைப் போல ( நம்மட நெலம டெங்குவ விளங்கபடுத்த கொரோனாவ உதாரணம் காட்ட வேண்டி இருக்கு) நோய்க்கான சிகிச்சை என்பது ஆதரவு மருத்துவம் தான் (Supportive management). இதுவரை டெங்குவை குணப்படுத்தும் மருந்தோ, தடுக்கும் வக்சீனோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை (சில வக்சீன்கள் ஆல்ரெடி முதல்கட்ட ஆய்வுகளை தாண்டிய பரீட்சார்த்த நிலையில் உள்ளன).

காய்ச்சலை குறப்பதும், உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிலும் குறிப்பாக இரத்தத்தில் உள்ள பாய்மத்தை (Plasma) குறைந்து விடாமல் பராமரிப்பதும், இரத்தக்கசிவுகளுக்கான மருத்துவமும் தான் டெங்குவிற்கு நாம் செய்ய வேண்டிய சிகிச்சை. இப்படி உரிய முறையில் சிறப்பான மருத்துவ பராமரிப்பு கிடைத்தால் இறப்பு 1%க்கும் குறைவு தான். இது வரை நான் வேலை செய்த யுனிட்களில் டெங்கினால் இறந்த குழந்தைகள் இரண்டே இரண்டு.

டெங்கு சீசனில் எந்த காய்ச்சல் வந்தாலும் அது டெங்குக் காய்ச்சல் என்று அனுமானித்துக் கொள்வது தான் முதலாவது அடிப்படை . Until proven otherwise it’s Dengue என்று எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. காய்ச்சல் வந்தவர்கள் உரிய அளவில் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை மெய்ன்டைன் பண்ணுவது இரண்டாவது அடிப்படை. இதற்காக நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தரம் குறைந்து 10ml/kg நீராகாங்களை பிள்ளைகளுக்கு அருந்தக் கொடுப்பது கட்டாயமானது.

உதாரணமாக 15kg பிள்ளை ஒன்றுக்கு 150ml நீராகாரம் (கஞ்சி/ஜீவனி/பழச்சாறு/இளநீர்/பால்) ஒவ்வொரு 4 மணித்தியாலமும் கட்டாயம் கொடுக்கப்படல் வேண்டும். அது போல ஒவ்வொரு நான்கு மணித்தியாலமும் குழந்தை சிறு நீர் கழிக்கிறதா என்பதும் அவதானிக்கப்பட வேண்டும். சாதாரணமாக 4ml/kg அளவு யூரின் (15kg பிள்ளை 60ml யூரின்) ஒவ்வொரு நான்கு மணித்தியாலங்களுக்கும் ஒரு தரம் போகிறதா என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

மேற் குறித்த இரண்டும் இல்லாத போது அல்லது இவை இரண்டையும் நடைமுறைப்படுத்த முடியாத போது வைத்தியசாலை ஒன்றில் அனுமதி பெற்றுக் கொள்வது சிறந்தது. அது போல அதிக வாந்தி, அதிக வயிற்று வலி, தலை சுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறல், மயக்கம் போன்ற ஆபத்தான அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னேரே வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதும் மிக அவசியமாகும். ஏனெனில் டெங்குவினால் நிகழ்ந்த மரணங்களில் பெரும்பாலானவற்றிக்கு மிக முக்கிய காரணம் தாமதித்து வைத்திய ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவே இருக்கிறது. அது போல காய்ச்சலை குறைக்கிறேன்‌ பேர்வழி என்று சில போலி வைத்தியர்களாலும், இன்னும் சில அறை குறைகளாலும் வழங்கப்படும் வலி நிவாரணிகளும் (Brufen), அதிக டோஸ் உள்ள பரசிடமோல் (பனடோல்) மருந்துகளும் சிலரது இறப்புக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

எதுவாக இருந்தாலும் வரு முன் காப்பதே சிறந்தது. ஆகவே சூழலை சுத்தமாக வைத்திருப்போம். டெங்கு பரவுவதை தடுப்போம். நோய் வந்தால் காலம் தாழ்த்தாமல் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்வோம்.

Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை.

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

438 total views, 1 views today