COVID தொற்றாளர்களுக்கு ஏன் செயற்கை Oxygen அவசியப்படுகிறது?
இந்த நிலைக்கு மரங்களை வெட்டுவதுதான் காரணமா?
By: Dr. A.I.A.Ziyad
MBBS (peradeniya)
MD- Health Informatics
இந்தியாவில் கோரோனாவின் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் , அதனோடு சேர்ந்த ஒட்ஸிசன் தட்டுப்பாடு, அதற்காக மக்கள் வீதிகளில் பரிதவிப்பது, பல மக்கள் ஒட்ஸிசன் இன்றி இறப்பது, இந்தியாவுக்கு ஏனைய நாடுகள் ஒட்ஸிஜென் வழங்கி உதவ முன்வருவது என அடிக்கடி சமூக ஊடகங்களிலும் , செய்திகளிலும் காணக்கிடைக்கிறது.
நாங்கள் மரத்தை வெட்டிவிட்டு இப்போது ஓட்ஸிசனுக்காக அலைகிறோம் என்ற விழிப்புணர்வு பதிவுகள் ஒருபுறம். இன்னொரு புறம் Mask அணிவதால்த்தான் இந்த மூச்சு திணறலும், ஒட்ஸிசன் குறைவும், இதனை சரி செய்ய Fan காற்றுக்கு முன்னால் உட்கார்ந்த்தால் சரியாகிவிடும் என சில ஹீலர்களின் உளறல்கள்.
உண்மையில் COVID தொற்றில் ஏன் இந்த அதீத ஒட்ஸிசன் தேவை? என பலரும் கேட்பதை அறியமுடிகிறது. அதற்கான விளக்கப்பதிவே இது.
உடல் கலங்களுக்கு தேவையான ஒட்சிஜனானது சுவாசத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அதேபோல் உடலில் உருவாகும் காபனீரொட்சைட்டு நுரையீரலில் இருந்து சுவாசத் தொகுதி ஊடாக வெளியேற்றப்படுகிறது.
அதை இன்னும் ஆழமாக சொல்வதானால் சுவாச பையில் காணப்படும் Epithelial Cells எனும் கலங்கள் இந்த வாயு பரிமாற்றத்தை செய்கின்றன.இந்த கலங்களின் பிரதான தொழிற்பாடு சுவாசப் பையை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதாகும்.
கொரோனா வைரஸ் (SARS-CoV-2) என்பவை பிரதானமாக சுவாசத் தொகுதியைப் பாதிக்கும். இந்த வைரஸ்கள் நுரையீரலின் epithelial காலங்களை அடைந்ததும் அந்த கலங்கள் இந்த virus தொற்றை உணர்ந்து தனது எதிர்வினையை காண்பிக்கும். இதனை inflammatory immune response என்போம். இந்த inflammation செயன்முறையால் நுரையீரலில் திரவங்கள் சுரக்கும் (fluids build up).
01. inflammation
02. சுரக்கும் திரவங்கள்
இவை இரண்டும் சேர்ந்து நுரையீரலின் மேற்பரப்பில் ஒட்ஸிஜென் பரிமாற்றத்தை பாதிக்கும்.
இதனால் உடல் கலங்களுக்கு கிடைக்கும் ஒட்ஸிஜெனின் அளவு குறையும்.
இதனை உணர்ந்த மூளை நுரையீரலை விரைவாக சுவாசிக்க தூண்டும். இதனை குறுகிய சுவாசம் (Shortness of Breath) என்போம்.
இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
நமக்கு தெரியும் நாம் சுவாசிக்கும் காற்றில் 20% ஒட்ஸிஜென், 78% நைதரசன் வாயு உள்ளது. நாம் விரைவாக சுவாசிக்கும்போது (நிமிடத்துக்கு 24 – 30 முறைக்கு மேல்) என்ன நிகழ்கிறது என்றால் நுரையீரலுக்குள் சென்ற காற்று முழுமையாக வெளியேற்றப்படாமல் மேல் சுவாச வழியில் உள்ள காற்றே உள்ளே வெளியே செல்கிறது. (விரைவாக சுவாசித்து பார்த்தால் இதனை உணரலாம். இதனாலேயே ஆழ்ந்த உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசம் செய்தல் போன்ற மூச்சு பயிற்சிகள் Covid தொற்றை எதிர்கொள்ள உதவும் என சொல்லப்படுகிறது.)
இந்த Shortness of Breath இனால் நுரையீரலை அண்மித்த பகுதியில் உள்ள எஞ்சிய 78% நைதரசன் வாயு மற்றும் சுவாசித்து வெளியான காபனீரொடசைட்டு வாயு நுரையீரலினுள் தேக்கமடைய இன்னும் ஓட்ஸிசன் விநியோகம் பாதிக்கப்பட மீண்டும் மூளை தூண்டப்பட்டு ஒரு விஷச்சக்கரமாக (vicious circle) மாறி இன்னும் சுவாச வீதம் வேகமாகும். இதனையே Severe Acute Respiratory Syndrome (SARS) என்போம். (இதனாலேயே புதிய Corona Virus க்கு SARS-CoV-2 என பெயரிடப்பட்டது.)
இப்போது செயற்கையாக Cylinder மூலம் வழங்கப்படும் ஒக்சிஜன் (Oxygen Theraphy) க்கு வருவோம்.
இதில் 95 – 99% தூய ஒட்ஸிஜென் காணப்படும். முன்பு சொன்ன அதே நிலையை இங்கு பிரயோகித்து பாருங்கள். Inflammation, திரவங்களால் ஒட்ஸிஜென் பரிமாற்றம் குறைந்துள்ள நிலையில் தூய ஓட்ஸிஜெனை வழங்கும்போது 78% நைட்ரஜனால் நிரப்பப்படும் இடைவெளி இல்லாமல் ஆக்கப்பட்டு ஒட்ஸிஜென் பரிமாற்றம் இலகுபடுத்தப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவிப்பது தவிர்க்கப்படும்.
Cylinder மூலம் வழங்கப்படும் ஒட்ஸிஜனால் நுரையீரலில் ஓட்ஸிஜென் பரிமாற்றம் திறம்பட நிகழ்வதால் Severe Acute Respiratory Syndrome நிலைக்கு செல்வது தவிர்க்கப்படுகிறது.
(இப்போ சொல்லுங்க இதுக்கு Fan காற்று சரி வருமா? Mask அணிந்ததற்கும் இதற்கும் சம்பந்தமா?)
Oxygen வழங்கிவிட்டால் எல்லா உயிர்களையும் காப்பாற்றிவிடலாமா? என்றால் இல்லை.
இது Inflammation ஆல் நிகழும் Lung Damage ஐ பொறுத்தது. Epithelial கலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு , அதிக திரவம் சுருக்கப்பட்டு ஓட்ஸிஜென் பரிமாற்றம் பாதிக்கப்பட்டால் 100% Oxygen வழங்கியும் பிரயோசனம் இல்லை. அத்தோடு இந்த Corona Virus இரத்த உறைவு, இருதய பாதிப்பு, மூளை பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதாலும் மரணத்தை உண்டுபண்ணும்.
யாருக்கு எப்போது செயற்கை oxygen தேவைப்படும்?
பொதுவாக இரத்தத்தில் Oxygen இன் அளவை Pulse Oxymeter எனும் விரல் நுனியில் பொருத்தும் கருவி மூலம் அளவிடலாம்.
இதன் அளவீடு 94% க்கு மேலே சாதாரண நபர்களுக்கு காணப்படும்.
90 – 94% வரும்போது Oxygen தேவை ஏற்படும்.
90% ஐ விட குறையும்போது கட்டாயம் Oxygen வழங்கவேண்டும்.
COVID தொற்றை பொறுத்தவரை 80 – 85% வீதமானவர்களுக்கு எந்த நோய் அறிகுறிகளும் ஏற்படுவதில்லை.
எஞ்சிய 15 – 20% மானவர்களில் சாதாரண , மிதமான , அதிதீவிர அறிகுறிகள் தோன்றலாம்.
சாதாரண கொரோனா (MILD DISEASE ) நோயாளிகளுக்கு
– காய்ச்சல்
– லேசான இருமல்
– லேசான தொண்டை வலி
– நுகர்தல் திறன் இழப்பு
– சுவைத்தல் திறன் இழப்பு
போன்றவை ஏற்படும்
இவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது
மூச்சுத்திணறல் ஏற்படாது
மிதமான கொரோனா (Moderate Disease) நோயாளிகளுக்கு:
Pulse oxymeter வாசிப்பு 90-94% காணப்படலாம்.
இவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
ஏனைய அறிகுறிகள் சுவாச வீதம் என்பவற்றை பொறுத்து Oxygen வழங்கப்படும்.
தீவிர கொரோனா (SEVERE COVID19) நோயாளிகளுக்கு:
தீவிர மூச்சுத்திணறல்
அல்லது
சுவாசித்தல் ஒரு நிமிடத்திற்கு 30 தடவைக்கு மேல் இருந்தாலோ
அல்லது
ஆக்சிஜன் அளவுகள் 90%க்கு கீழ் சென்றாலோ
அது “தீவிர கொரோனாவாகும்”
இவர்களை கட்டாயம் ICU வசதி உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும்.
இவர்களுக்குத் தான்
மிக அதிகமான அளவு ஆக்சிஜன்
மிக நீண்ட நாட்கள் தேவை
இத்தகைய நிலையை எட்டும் 3% சதவிகிதம் மக்களுக்கு நிச்சயம் ஆக்சிஜன் மட்டுமே உயிரைக் காக்கும் அருமருந்தாகும்.
ஒட்சிசன் சிகிச்சை என்றால் என்ன? யாருக்கு? எப்போது தேவைப்படும்? முன்னைய பதிவுக்கு:
https://www.lankahealthtamil.com/oxygen-therapy-covid/
“Oxygen Cylinders Vs Oxygen concentrators: அறியவேண்டிய வேறுபாடுகள்” முன்னைய பதிவுக்கு:
உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரபூர்வமான சுகாதார தகவல்களுக்கு எனது பக்கத்தை Like செய்து இணைந்திருக்க.
#Dr_Ziyad_Aia
facebook.com/LankaHealthTamilPage
1,194 total views, 1 views today