COVID -19 க்கு எதிராக புதிய மருந்து Dexamethasone குறித்து பிரிட்டன் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவு தான் இப்போதைய ஹைலைட்.
By Dr Farook Abdulla

டெக்சாமெத்தசோன் எனும் ஸ்டீராய்டு வகை மாத்திரை அல்லது மருந்தை வாய் வழியாகவோ நாளங்கள் மூலமாகவோ கோவிட் பாதித்த நோயாளிக்கு கொடுக்கும் போது மரணமடைவது தடுக்கப் படுகிறது. என்றும்

உலகில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகளில் மரணத்தை குறைக்கும் வகையில் வெளிவந்துள்ள வெற்றிகரமான ஆராய்ச்சியாக இது உள்ளது என்று அந்த ஆராய்ச்சியை நடத்தியிருக்கும் பிரிட்டன் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு முதலில் வாழ்த்துகள்.

அடுத்து ஸ்டீராய்டு என்றால் என்ன?

ஸ்டீராய்டு என்றால் நமது எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் ஒரு அவசரகால மருந்தாகும்.

உதாரணத்திற்கு;
நம்மை ஒரு குளவி கொட்டி விடுகிறது.
உடனே நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உடலுக்கு பெரிய தீங்கு நேர்ந்தது என்று உணர்ந்து அதிகமாக ரியாக்சன் கொடுக்கும் இதன் விளைவாக.

உடல் முழுவதும் அரிப்பு
தொண்டை கமுறுதல்
மூச்சு விடுவதில் சிரமம்
சிலருக்கு சுவாசப்பாதை அடைத்துக்கொண்டு மூச்சு நின்று போகும் அளவு கூட அலர்ஜி ஏற்படும்.

இத்தகைய சூழ்நிலைகளில் உடனடியாக நமது எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் ஒரு மருந்து தேவை.
அவற்றை தான் ஸ்டீராய்டு என்று அழைக்கிறோம்.

டெக்சாமெத்தசோனும் இந்த வகை ஸ்டீராய்டு மருந்து ஆகும்.

இத்தகைய உயிர்காக்கும் மருந்தை நமது நம்ம ஊரில் (இலங்கை) One Shot வைத்தியர்களின் கைராசி மருந்து.

சாதாரண காய்ச்சல் தொடங்கி
மூட்டு வலி / முடக்கு வாதம் வரை அனைத்துக்கும் இந்த மாத்திரையை வாங்கி வருடக்கணக்கில் சாப்பிடுவார்கள் மக்கள்.

மிகவும் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்படும் மருந்துகளில் இந்த டெக்சாமெத்தசோனும் ஒன்று.

அதற்கு காரணம் இதன் விலை மிக மிக குறைவு என்பதே.

சரி இத்தகைய மாத்திரை எப்படி COVID-19 மரணத்தை குறைக்கிறது?

கோவிட்19 நோய் தொற்று இருப்பவர்களுக்கு
நுரையீரலை தாக்கும் நியுமோனியா ஏற்படுகிறது.
சிலருக்கு வந்திருக்கும் வைரசை எதிர்த்து நமது உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலம் பெரிய எதிர்தாக்குதல்(brutal retaliation) நடத்துகிறது.

இந்த தாக்குதலில் வைரஸ் அடிவாங்குகிறதோ இல்லையோ நமது உடலின் முக்கிய பாகங்களும் சேர்ந்து அடி வாங்குகிறது.
போர் மொழியில் ,இதை collateral damage என்பார்கள்.

இதை தான் கோவிட் 19 நோயில் உருவாகும் “சைட்டோகைன் பிரளயம் ” என்று அழைக்கிறோம். (CYTOKINE STORM)

இத்தகைய பிரளயம் சுற்றி சுழன்று தாக்கும் போது நமது எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ஒரு மருந்து தேவை.

அந்தவகையில் tocilizumab போன்ற மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
கொரோனாவுக்கு எதிரான போரில் அந்த மருந்தும் பல உயிர்களை காத்து வருவதை காண்கிறோம்.

இந்த நிலையில் இந்த பிரளயத்தில் இருந்து நம்மை காக்கும் விலை குறைந்த மருந்ததாக டெக்சாமெத்தசோன் முன்மொழியப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த ஆய்வின் முடிவில் ஒரு “ஃ”அன்னா இருக்கிறது.

அது என்ன அந்த ஃ ன்னா என்றால்

ஆய்வில் சோதிக்கபட்டவர்களை 28 நாட்கள் கண்காணித்ததில் டெக்சாமெத்தசோன் எடுக்காமல் இருந்த குழுவில்.

செயற்கை சுவாசமான
வெண்டிலேட்டரில் இருந்தவர்களில் 40%பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆக்சிஜன் மட்டும் தேவைப்படும் நிலையில் இருந்தவர்களில் 25% பேர் மரணமடைந்துள்ளனர்.

எந்த பெரிய சிகிச்சையும் தேவைப்படாதவர்களில் 13% பேர் மரணமடைந்துள்ளனர்.

சரி இப்போது டெக்சாமெத்தசோன் மருந்தை எடுத்தவர்கள் கொண்ட குழுவில் என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

வெண்ட்டிலேட்டர் பயன்பாட்டில் இருந்தவர்களில்
40% மரணங்களை 28% ஆக குறைத்தது

ஆக்சிஜன் தேவை மட்டும் இருந்தவர்களில்
25% ஆக இருந்த மரணங்களை 20% ஆக குறைத்தது

இதுவே டெக்சாமெத்தசோன் செய்த மாற்றம்

அதாவது
டெக்சாமெத்தசோன் மாத்திரை எடுக்காமல்
எட்டு பேர் வெண்டிலேட்டரில் இருந்தால் மூன்று பேர் மரணமடைவார் என்றால்

இந்த மாத்திரையை கொடுத்தால் மேலும் ஒருவர் மட்டும் எக்ஸ்ட்ராவாக காக்கப்படுவார்.

இன்னும் சுருக்கமாக டெக்சா இல்லாமல்
3/8 மரணமடைய வேண்டிய இடத்தில் டெக்சா இருந்தால் 2/8 மரணமடைவார். ஆக எட்டு வெண்டிலேட்டர் நோயாளிகளில் ஒருவர் எக்ஸ்ட்ராவாக உயிர் பிழைப்பார்.

அடுத்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளில் டெக்சா இல்லாமல் 25 பேருக்கு 6 பேர் இறந்தால்
டெக்சா கொடுத்தால் 5 பேர் மட்டுமே இறப்பார்கள். இங்கும் 25 ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்கும் ஒருவர் எக்ஸ்ட்ராவாக காக்கப்படுவார்.

இது பார்க்க சிறிய விசயமாக தோன்றினாலும்

இதை பொது சுகாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் போது பெரிய விசயமாகும்.

ஒரு உதாரணம் கூறுகிறேன் பாருங்கள்.

ஒரு மாநிலத்தில்
கிட்டத்தட்ட எட்டாயிரம் மக்களுக்கு வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம் .

டெக்சா கொடுக்காமல் இருந்தால் அந்த எட்டாயிரம் பேரில் மூவாயிரம் பேர் மரணமடைவர் .
இதே டெக்சா மாத்திரை கொடுத்தால் இரண்டாயிரம் பேர் தான் மரணமடைவர்.

ஆயிரம் பேர் காக்கப்படுவார்கள்.

ஆக்சிஜன் தேவைப்படுவோர்
25,000 பேர் என்றால்
டெக்சா இல்லாமல் இருந்தால் ஆறாயிரம் பேர் இறப்பார்கள்.

இதுவே டெக்சா மாத்திரையை கொடுத்தால்
ஐந்தாயிரம் பேர் இருப்பார்கள்.

ஆயிரம் பேர் காக்கப்படுவார்கள்.

எனவே ஒரு சாதாரண விலை குறைந்த ஒரு மருந்து நூற்றுக்கணக்கானோரை மரணத்தில் இருந்து காக்க இருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

ஒரு உயிரைக் காத்தாலும் அது சிறந்தது தானே.

இந்த மருந்தை பற்றி மூன்று மாதங்கள் முன்பே தெரிந்திருந்தால் உலகம் முழுவதும் ஐயாயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மருந்தை எப்போது பயன்படுத்துவது?

ஸ்டீராய்டு மருந்துகள் என்பவை இருபக்கம் தீட்டப்பட்ட வாள் போன்றவை
இவற்றை பயன்படுத்துவதில் மிகுந்த நேர்த்தி தேவை.

எனவே இதை கோவிட் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
தங்களது வெண்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கும் உபயோகிப்பார்கள்.

இதைத்தவிர வேறு யாரும் நோயை தடுக்கும் என்றோ
நோய் முற்றாமல் தடுக்கும் என்றோ நம்பி இந்த மாத்திரையை தாங்களாகவே வாங்கி உண்ணுதல் கூடாது.

காரணம்

நான் ஏற்கனவே கூறியது போல ஸ்டீராய்டு என்பது இருபக்கம் தீட்டிய வாள்.
இதை தேவையில்லாமல் எடுத்தால் ஒருவருக்கு வரும் காய்ச்சல் இருமல் உடல் வலி போன்ற கோவிட் நோயின் அறிகுறிகளை கூட மட்டுப்படுத்தி வெளியே தெரியாமல் செய்து விடும். இது ஆபத்தாகும்.

அடுத்து நோய் ஏற்படும் முன்னே இந்த மாத்திரைகளை அதிகமாக எடுப்பது
நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து கோவிட் நோய்க்கு நம்மை எளிதில் ஆளாக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த மாத்திரையை அதிகம் உபயோகப்படுத்துபவர்களில் கால் தொடை எலும்பின் கழுத்து பகுதியில் ரத்த ஓட்டம் தடைபட்டு உடைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.

எனவே இந்த உன்னத முக்கியமான மருந்தை கோவிட் நோய் முற்றிய நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதே சரி.

மேலும் இந்த மருந்து கொடுத்தால் அத்தனை பேரும் மரணத்தருவாயில் இருந்து எழுந்து நடந்து விடுவார்கள் என்று சர்வ ரோக நிவாரணியாக இதை பரப்புவதும் தவறு.

காரணம் நான் முன்னரே கூறியது போல்
இது மரணங்களை குறிப்பிட்ட அளவு குறைக்க மட்டுமே பயன்படுகிறது.
முற்றிலும் முழுவதுமாக மரணத்தை நிறுத்த முடியாது.
இந்த மாத்திரையை பயன்படுத்தினாலும்
வெண்டிலேட்டரில் இருப்பவர்களில் எட்டில் இரண்டு பேரும் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களில் 25இல் ஐந்து பேரும் இறப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,531 total views, 1 views today