Bee’s Honey – A miraculous gift from nature to mankind

By: Dr. Sajeetha Musathique

MBBS, Trainee in MSc – Nutrition

தேனீக்களில் இருந்து  பெறப்படும் தேன் பழங்காலத்திலிருந்தே மக்களால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஊட்டச்சத்து, சிகிச்சை, ஒப்பனை மற்றும் தொழில்துறை நன்மைகளுக்காக இது மனிதகுலத்தால் பரவலாகப் பாராட்டப்படுகிறது.

தேனானது இலங்கையை பொறுத்தவரை அனைத்து மதங்கள், தலைமுறைகள் மற்றும் நாகரிகங்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டதாகும். எனவே தேனீக்களின் தேன் மகத்தான வரலாற்று, மத, மருத்துவ மற்றும் போசணை ரீதியான மதிப்பைக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.

பழங்காலத்தில் மனித சடலங்களை தேனில் அமிழ்த்தி பாதுகாப்பதன் மூலம் உருகிய மனிதன் ( mellified man) அல்லது மம்மிகள் உருவாக்கப்பட்டன என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. இது தேனின் சக்திவாய்ந்த பாதுகாக்கும் தன்மை மற்றும் அதன் காலாவதியாகாத தன்மை ஆகியவற்றைக் காட்டுகிறது.

 

தேன் உருவாக்கம்

தேனீக்கள் பூக்களில் இருந்து சர்க்கரை நிறைந்த அமிர்தத்தை உறிஞ்சி பல படிமுறைகளூடாக தேனாக மாற்றுகின்றன. தேனியின் இரைப்பையிலிருந்து மேலெழுதல்(regurgitation), நொதிய செரிமானம் மற்றும் ஆவியாதல் போன்ற படிமுறைகளூடாக தேனை உற்பத்தி செய்கின்றன.

இது தேன்கூடு கலங்களில் (honey comb cells) சேமிக்கப்படுகிறது. மேலும் நொதித்தலை தடுக்க தேனீக்கள் கலங்களை மெழுகினால் மூடுகின்றன. தேனீக்கள் தேனை சேமித்து வைப்பதற்கு தேன் கூடுகளின் உகந்த வெப்பநிலையை பராமரிக்கின்றன. தேன் கூட்டில் இருந்து மூல தேன் சேகரிக்கப்படுகிறது. இலங்கையில் தேன் முக்கியமாக “அபிஸ் செரானா” (Apis cerana) எனும் தேனீக்கள் மூலமே  தயாரிக்கப்படுகிறது.

 

 

தேன் வகைகள்

  • தேனில் பல வகைகள் உள்ளன.
  • இது தாவரவியல் தன்மைகள், புவியியல் பகுதிகள் மற்றும் செயலாக்க முறைகளைப் பொறுத்து மாறுபடும்.
  • தேனின் உருவாக்கத்தின் அடிப்படையில் 2 வகைகளாக பிரிக்கலாம்.

 

  1. மலர்களிலிருந்து பெறப்படும் தேன் – Blossom honey or nectar honey
  2. பொன் மெழுகு தேன் – Honey dew honey

 

  • Blossom தேனை பெறப்படும் மலர்தாவரங்களின் அடிப்படையில் மேலும் வகைப்படுத்தலாம்.
  • ஓரின தாவரத்தில் இருந்து பெறப்படும் தேன்(monofloral)- உ. ம் : மனுகா தேன் – manuka honey, இவ்வகை மனுகா தேன் உலகிலேயே மிகச் சிறந்த தேனாக கருதப்படுகிறது.
  • பலயினத்தவரத்தில் இருந்து பெறப்படும் தேன் (polyforal)
  • ஹனிட்யூ (honey dew)தேன் – இது அஃபிட்ஸ் அல்லது பிற தாவர உறிஞ்சும் பூச்சிகளின் சுரப்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
  • பாரம்பரிய மருந்துகளின்படி தேனை பல வகைகளாகப் பிரிக்கலாம். ஆயுர்வேதத்தில் பல வகைகள் உள்ளன, ‘மக்க்ஷிகா’ ஆயுர்வேதத்தில் சிறந்த தேனாக கருதப்படுகிறது.

 

தேனின் ஊட்டச்சத்து விவரம்

தேனின் அற்புதமான தன்மை அதன் போசணை உள்ளடக்கமானது தேனீ வகை, மலர் மூலங்கள், சுற்றுச்சூழல் காரணிகள், பருவகால மற்றும் தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து மாறுபடும். தேன் என்பது கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள், மினரல்கள், அன்டிஒக்சிடன்கள் (antioxidants), நீர் மற்றும் பிற சேர்மானங்களின்  கலவையாகும்.

தேனின் நிறம் அதன் antioxidants உள்ளடக்கத்தைப் பொறுத்தது, இயற்கையாகவே கருமையான தேனில் இலகுவான தேனை விட அதிக அளவு antioxidants உள்ளது. தேனீயின் தேன் கொலஸ்ட்ரால் இல்லாதது.

பொருட்கள் அளவு (g/100g தேன்)
Energy 304 Kcal
Water 15-20
Total sugars 79.7
fructose 30-45
glucose 24-40
sucrose 0.1-4.8
oligosaccharides 3.1
minerals 0.1-0.5
Amino acids, proteins 0.2-0.4
Phenolics 5-50
acids 0.2-0.8
PH value 3.2-4.5

 

 

 

 

 

மினரல்கள் அளவு (mg/100g) விட்டமின்கள் அளவு (mg/100g)
Sodium 1.6-17 Thiamine 0.00-0.01
Calcium 3-31 Riboflavin 0.01-0.02
Potassium 40-3500 Niacin 0.1-0.2
Magnesium 0.7-13 Pantothenic acid 0.02-0.11
Phosphorus 2-15 Pyridoxine 0.01-0.32
Selenium 0.002-0.01 Folic acid 0.002-0.01
Copper 0.02-0.6 Ascorbic acid 2.2-2.5
Iron 0.03-4 Phylloquinone 0.025
Manganese 0.02-2
Chromium 0.01-0.3
Zinc 0.05-2

 

தேனின் நன்மைகள்

நுண்ணுயிர் எதிர்ப்பு  பண்பு (antimoicrobial property)

தேன் பல சிக்கலான பொறிமுறைகளூடாக பக்டீரியா,  வைரஸ், பங்கசு போன்ற  நுண்ணுயிர்களுக்கு  எதிராக  செயல்படுகிறது.

இந்தப்பொறி முறைகளுக்கு தேனின் பின்வரும் தன்மைகள் காரணமாக அமைகின்றன:-

  • தேனின் குறைந்த pH அளவு
  • செறிவான வெல்ல அளவு
  • அன்டிஒக்சிடன்ட் ( antioxidants)
  • ஹைட்ரோஜென் பேரொக்ஸிட் (Hydrogen peroxide )
  • புரதங்கள்
  • D – பிரக்டோஸ், D – குளுக்கோஸ்

 

அழற்சி எதிர்ப்பு பண்பு

தேனின் இந்த பண்புக்கு  தேனிலுள்ள அண்டிஒக்சிடன்ட்ஸ் பிரதான காரணமாகும்.  தேனிலுள்ள முக்கியமான  அன்டிஒக்சிடென்ட்  பிளேவனாய்டு (flavonoids)  ஆகும். இவை  மனிதக்கலங்களில் ஃப்ரீ ரடிகல்ஸ் ( free radicals ) எனப்படும் ஒற்றை இலத்திரனியல் அணுக்கள் ஏற்படுத்தும் அபாயங்களை  தடுக்கின்றன. இதன் மூலமாக  கலங்கள் செயலிழத்தல், வயதாதல், வளர்சிதைமாற்ற நோய்கள் (metabolic diseases), இதய நோய்கள் ஏற்படுவதிலிருந்து குறிப்பிட்டளவு  பாதுகாக்கின்றது.

 

பதனிடப்படுத்தும் தன்மை (Preservative property)

பழங்காலத்திலிருந்தே தேன் உணவுப் பொருட்களை பதனிடப்படுத்தி பாதுகாப்பதற்கு  பயன்படுத்தப்படுகிறது. தேனிலுள்ள செறிந்த வெல்ல அளவு மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் என்பன தேனின் பாதுகாக்கும் பண்புக்கு காரணமாக அமைகிறது.

இறைச்சி, பழவகைகள், பால் மாதிரிகள் உள்ளிட்ட உணவுகளைப் பாதுகாக்க தேனைப் பயன்படுத்தலாம்.

 

இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்கும் பண்பு (Hypoglycemic property)

  • பின்வரும் காரணிகளால் தேன் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் என சொல்லப்படுகின்றது.
  • தேனின் பிரதான வெல்லம் பிரக்டோஸ் ஆகும்.இது குறைந்த கிளைசிமிக் குறியீட்டைக் (glycaemic index) கொண்டுள்ளது. அதாவது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது குளுக்கோஸுடன் ஒப்பிடுகையில் பிரக்டோஸிற்கு குறைவாகும்.
  • தேன் சர்க்கரையை விட இனிமையானது. ஆனால் சர்க்கரையை விட குறைவான கலோரிகளை தருகிறது. எனவே, இனிப்புக்கு மிகக் குறைந்த அளவு தேனே தேவைப்படுகிறது.
  • தேனை தண்ணீரில் கரைக்கும் போது ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தியாகிறது, இது கணையத்தின் பீட்டா கலங்களை ( pancreatic beta cells) தூண்டி இன்சுலின் சுரக்க உதவுகிறது. கணையத்தின் பீட்டா கலங்களால் சுரக்கப்படும் இன்சுலின் ஹோர்மோன் இரத்தத்தில் சீனியளவை சீராக பேணுவதற்கு அத்தியாவசியமாகும். மற்றும் சேதமடைந்த பீட்டா கலங்களை மீண்டும் உருவாக்க தேன் வழிவகுக்கிறது.
  • பல சிறப்பியல்புகளை கொண்ட தேனின் அன்டிஒக்சிடன்ட்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.
  • தேன் பல விட்டமின்கள் மற்றும் மினரல்களை வழங்குவதால் மேலும் நன்மை பயக்கின்றது.
  • தேனிலுள்ள ஒலிகோசக்கரைடுகள் ( Oligosaccharides) உடல் பருமன், இன்சுலின் செயலிழத்தல் ( Insulin resistance) மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிரான தடுப்புப் பங்கைக் கொண்டுள்ளன என்று ஆய்வுகளில் அனுமானிக்கப்படுகிறது.

 

விலங்குகளில் நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையிலேயே இவ் விபரங்கள் அறியப்பட்டுள்ளன. இருப்பினும் நீரிழிவு நோய்க்கு தேனை உணவாக அல்லது மருந்தாக பயன்படுத்துவது இன்னும் முடிவில்லாதது. மற்றும் சிறந்த முடிவுகளை அடைய பெரியளவிலான, பல மாதிரிகளையும் பல மையங்களையும் உள்ளடக்கிய மருத்துவ ஆய்வுகள் அவசியமாகும்.

 

காயங்களை குணப்படுத்தும் தன்மை ( wound healing property)

பழங்காலத்திலிருந்தே காயங்களை குணப்படுத்த தேன் பயன்படுத்தப்படுகிறது. தனித்தன்மை வாய்ந்த மனுகா தேன் காயங்களை விரைவாக குணப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

வாய்வழி ஆரோக்கியம்( oral health)

தேன் அதன் பக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் கல்சியம்(calcium), புளோரைட்(flouride), பொஸ்பரஸ்(phosphorus) மற்றும் கொலொயிட் (colloid) போன்ற மூலக்கூறுகள் போன்றவற்றின் காரணமாக வாய்வழி சுகாதாரத்தை பேணுகின்றது.

 

இரைப்பை குடல் நன்மைகள்( Gastrointestinal benefits)

தேனில் பல நொதியங்கள் உள்ளன, அவை உணவுப் பொருட்களை குறிப்பாக கார்போஹைட்ரேட் செரிமானத்தை எளிதாக்குகின்றன. தேனின் ஒலிகோசக்கரைட் (Oligosaccharides) கூறு காரணமாக அதன் பிரிபயோடிக் ( prebiotic) விளைவுகளை பல ஆய்வுகள் ஆவணப்படுத்தியுள்ளன. Prebiotics எனப்படுவது குடலில் நன்மை பயக்கும் நுண்ணங்கிகளின் வளர்ச்சிக்கு உதவி குடல் ஆரோக்கியத்தை பேணுவதாகும்.

 

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு உதவுதல்

தேனிலுள்ள பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் விகிதமானது உடல் பயிற்சியின்போது தேன் தேவையான அளவில் சக்தியை (energy replenishment) வழங்க வழிவகுக்கிறது. தேன் விளையாட்டு பானங்களுக்கு (sports supplements) நிகரானதாக அல்லது சிறந்த மாற்றீடாக அமைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாதகமான விளைவுகள்

இத்தகைய பல நன்மைகளை தேன் கொண்டிருந்த போதும் சுத்தமான சிறந்த தேனை சந்தையில் கண்டுபிடிப்பது சவாலாகவே உள்ளது.

தேனீக்களின் தேன் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் அதன் தூய்மயை இழக்கலாம். கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள், நுண்ணுயிர்கொல்லிகள் மற்றும் பிற நச்சு கலவைகள் போன்றவற்றால் தேன் மாசடையலாம். இவை நோய் கட்டுப்பாடு, தற்செயலான நிகழ்வுகள், முறையற்ற மனித நடைமுறைகள் போன்றவற்றின் விளைவுகளாகும். ஈயம்(Lead), ஆர்சனிக்(Arsenic), கட்மியம்(Cadmium) ஆகியவை தேனை மாசுபடுத்தும் பிரதான கன உலோகங்களாகும். இவை பூக்களை வளர்ப்பதற்காக பிரயோகிக்கப்படும் வேளாண்மை இரசாயனங்கள் மூலமாக ஏற்படுகிறது. குரோமியம் (Chromium) மற்றும் நாகம் (Zinc) போன்ற தாதுக்கள் தேன் அறுவடை, பதப்படுத்துதல் மற்றும் சேமித்தலின் போது தேன் மாசுபட காரணமாக அமைகிறது. பாதுகாப்பான அளவுகளுக்கு அப்பாற்பட்ட அதிக செறிவான கனரக உலோகங்கள் மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும்.

தேனைப் பற்றிய மற்றுமொரு முக்கியமான விடயம்தான் இயற்கையான தேனில் சிலவேளை காணப்படும் குளோஸ்ட்ரிடியம் பொட்டுலினம் – Clostridium botulinum எனும் பாதகமான நுண்ணங்கியாகும். குழந்தைகளுக்கு பச்சைத் தேனைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவது குழந்தைகளின் முதிர்ச்சியடையாத குடல் குளொஸ்ட்ரிடியம் பொட்டுலினம் வித்திகளுடன் நேரிடுவதை தவிர்ப்பதற்காகும். இந்த பக்டீரியா மாசுபாட்டைத் தவிர்க்க, தேன் அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழக்காத முறையில் காமா கதிர்வீச்சுடன் (gamma irradiation) கிருமி நீக்கம் செய்யப்படலாம்.

சிந்திக்க சில புள்ளிகள்:

  • இயற்கை விவசாயத்தை நிறுவுதல்( organic farming) மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவை மகரந்தச் சேர்க்கையில் முக்கியமான விடயமாகும். இவை சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்கான செயல்முறையாகும்.

 

  • தேனின் தரநிலைகளை மேம்படுத்துதல் மற்றும் சான்றிதழுடன் சோதனை செய்தல், கலப்படத்தைக் குறைத்து, நுகர்வோருக்கு சிறந்த தரமான தேனை வழங்க வழிவகுக்கும்.

 

  • தேனைத் தவிர, தேனீக்கள் உருவாக்கும் ரோயல் ஜெல்லி (Royal jelly), புரோபோலிஸ்( propolis) மகரந்தம்(bee pollen) மற்றும் தேன் மெழுகு ( beeswax) ஆகியவை அவற்றின் உயிரியல் கூறுகள் மூலமாக ஏராளமான நன்மைகளை மனிதனுக்கு தரக்கூடியதாகும். இவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக (value added products) மாற்றி புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாம். உதாரணமாக பயன் படாமல் வீசப்படும் தேன் மெழுகிலிருந்து அழகு சாதன கிரீம்கள், மெழுகுவர்த்திகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யலாம்.

 

  • தேனீ வளர்ப்பு, தேன் பிரித்தெடுத்தல் மற்றும் செயலாக்கம் போன்ற படிமுறைகளில், குறைந்த விலை புதிய தொழில்நுட்பங்களை பண்ணை மட்டத்தில் இருந்து ஊக்குவித்தல், சிறந்த சுகாதார முறைகளை கைக்கொள்ளல் போன்றன அவசியமாகும். அது மக்களுக்கு சிறந்த சுகாதார பயன்பாடுகளை வழங்குவதோடு நமது நாட்டின் பொருளாதார ஆதாயத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

562 total views, 4 views today