விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம். Dr M.J.M. Suaib இன் 2016 நாள் குறிப்பேட்டில் இருந்து…

50 வயது நாடோடிக் குடும்பத்துப்பெண் மூச்செடுப்பதில் கஷ்டம், கழுத்து மற்றும் நெஞ்சு இருகிக் கொள்கிறது என்று காலை நேரம் எங்கள் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள்.

கண்களை அகலத் திறந்தவளாக அவசர அவசரமாக ஆழமற்ற மூச்சுக்களை எடுத்தவளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஆரம்பச் சோதனையில் என்ன நிலைமை என்பதை ஊகிக்க முடியவில்லை. மாலையாகும் போது அவளின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. மூச்சு விடுவதில் கஷ்டம் அதிகரிக்க, எதையுமே உண்ண முடியாது, குடிக்க முடியாது என்றாகி விட்டது. சிறு புத்தகத்தை விசிறும் போது வருகிற சிறு காற்றுக்குக் கூட மிக எரிச்சலடைந்து (irritable) பதறுபவளாக இருந்தாள்.

நீரை வாய்க்கெடுத்து மிகக் கஷ்டத்தோடு விழுங்கி உடனே மூச்செடுக்க முடியாமல் வாந்தியெடுத்தவள் நேரஞ் செல்லச்செல்ல நீரை வாய்க்கெடுக்கவும் மறுத்தாள்.

(இப்போது நிலைமை இது தான் என்பதை ஊகித்துக் கோண்டோம்)

இரவாகும் போது நிலைமை மிகமிக மோசமானது. ஜன்னலூடாக வருகிற காற்றுக்கு துடித்து விடுவாள், நீரைக் காணும் போதே உதறிவிட்டு மூச்செடுக்கக் கஷ்டப்படுவாள். மனித நடமாட்டங்களையோ வெளிச்சத்தையோ காணும் போதும் சத்தங்களைக் கேட்கும் போதும் எரிச்சலடைந்து தடுமாறுவாள். அருகே போனால் பாய்ந்து கடிக்கவும் முற்படுவாள். இடைக்கிடையே வலிப்பும் வந்து போனது. இக்காட்சிகளைக் காணுகிற போது இதற்கு மருத்துவமுமில்லை, சாவும் நிச்சயம் என்பதால் மிகவும் கவலையாக இருந்தது.

இனி செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அவளை இலகுவாக மரணிக்க விடுவது தான் (கருணைக் கொலை செய்வதல்ல, வரப்போகும் மரணத்தை இலகுவாக்குவது.)

கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்ட நிலையில் வாட்டின் ஒரு மூலையில் அவள் தனித்து வைக்கப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டு மின்விசிறிகள் மற்றும் மின்குமிழ்கள் நிறுத்தப்பட்டு காற்றும் வெளிச்சமும் சத்தங்களும் எவ்வித அசைவுகளையுங் காணாத படி கருப்புப் பொலிதீனை அவளைச்சுற்றிக் கட்டி அமைதியான சூழல் வழங்கப்பட்டது. அவளது எரிச்சலைக் குறைத்து அமைதியடையவும் தூங்க (sedation) வைக்கவுமென ஒரேயொரு ஊசி மருந்து மட்டுமே இடைக்கிடையே போடப்பட்டது. அதுவும் முழு அமைதியடைந்தவளாக இருக்கவில்லை.

மறுநாள் காலை எதிர்பார்த்த படி மூச்சு விட முடியாமலேயே மரணத்தைத் தழுவினாள்!!!

முதன்முதலில் காற்றுக்குப் பயந்தமை (aerophobia) நீரை வெறுத்தமை (hydrophobia) என்பன rabies எனும் விசர் நாய்க்கடி/ நீர் வெறுப்பு நோய்க்கே உரிய பண்புகளாதலால் நாய்க்கடி நிகழ்ந்ததா என குடும்பத்தில் அனைவரிடமும் தீர விசாரித்தோம். நீண்ட நேரம் யோசித்த அவளது கணவன் சொன்னார், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தோடு நாடோடிகளாகத் திரிந்த பின் ஓரிரவு வாரியபொல வாரச் சந்தைக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாய்க்குட்டி அவளைக் கடித்ததாம்!

 

இது தான் விசர் நாய்க்கடி நோயின் மேலோட்டமான கோரம், எல்லாக் குணங்குறிகளும் இங்கு சொல்லப்படவில்லை.

(rabies நோயின் கோரத்தை அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்க.)

எல்லா மரணங்களிலும் மரண வேதனையை அனுபவிப்பது மரணிப்பவர் மட்டுமே என்றாலும் இவ்வகை மரணத்தைக் காண்பவர்களுங் கூட வேதனையை உணர்கின்றனர்.

ரேபீஸ் நோய்த் தொன்றுக்குள்ளான நாய் கடித்தால் 2 வாரங்களுக்குள் அந்நாய் மரணிப்பதோடு உரிய மருத்துவம் பெறப்படாவிடின் கடிபட்டவரும் நோய் தொற்றினால்  மரணித்தே விடுவது நிச்சயம்.

இந்நோயை வருமுன் (நாய் கடித்தவுடன்)  இரு வகை ஊசி மருந்துகள் மூலம் காக்க முடியுமே தவிர வந்த பின் குணப்படுத்த முடியாது.

எனவே உரிய முறையில் ஊசி போடப்படாத வீட்டு நாய்கள், கட்டாக்காலி நாய்கள், பூனை, மர அணில், குரங்கு, காட்டெலி, &…கடித்தாலோ அவற்றின் நகக்கீரல் ஏற்பட்டாலோ உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

ஊசி கூடாதென்று உலருகின்ற கூட்டம் இதற்கென்ன செய்யுமோ? நீங்கள் செத்து மடிந்தாலும் சமூகம் நலம் பெறும், அப்பாவி மக்களை கொலை செய்து விடாதீர்கள் என்பது தான் எங்கள் வேண்டுகோள்.

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

 

6,104 total views, 1 views today