By:- Dr Ziyad AIA 
சிகரெட் பாக்கெட்டுகளில் 20% ஆக இருந்த எச்சரிக்கை வாசகம் இப்போது அதன் Packet இல் 80% வரை இடப்பட வேண்டும் என சுகாதார துறையினரின் பல போராட்டங்களுக்கு பின்  பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இது உண்மையில் புதிதாக புகைப்பிடிக்க தொடங்கும் ஒருவருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது
ஆனால் இந்த எச்சரிக்கையின் மறுபக்கமும் உள்ளது.
இதனை புரிந்துகொள்ள சமீபத்தில் புற்றுநோய்க்காக  நஷ்ட ஈடு வழங்க ஆணையிடப்பட்ட இரு வழக்குகளின் தீர்ப்பை மேற்கோள் காட்டலாம் என நினைக்கிறேன்.
01. சில மாதங்களுக்கு முன்னர் Johnson & Johnson நிறுவனம் தனது Talk Powder (முக பவுடர்) தயாரிப்பில் Asbestos கலந்து இருப்பதால் புற்று நோயை உண்டாக்குவது உறுதிப்படுத்தப்பட்டு அதனால் நஷ்டஈடு வழங்கும்படி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (வழக்கு தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 Billion USD நஷ்ட ஈடு)
தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயம் பவுடர்களில் asbestos கலந்து இருப்பது பாவனையாளர்களுக்கு தெரியப்படுத்தவில்லை, அவற்றால் Cancer உருவாகும் எச்சரிக்கை இடம் பெற்றிருக்கவில்லை என்பதே.
அதேபோன்று அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோயை உண்டாக்குவதால் பல நாடுகள் தடை செய்தன.
02. அதற்கு அடுத்தபடியாக வழங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு தான் Monsanto நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Roundup எனும் களைநாசினிக்கு எதிரான தீர்ப்பு. அக்களை நாசினியானது Glyposate என்னும் மூலப் பொருளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது புற்றுநோயை உண்டாக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு 289 மில்லியன் USD நஷ்ட ஈடு வழங்குமாறும் அதற்கு காரணம் களைநாசினி நிறுவனம்  புற்றுநோய் பற்றிய எச்சரிக்கையை முன்கூட்டியே வழங்கி இருக்கவில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.
(உண்மையில் கிளைபோசேட் தடையினால் இலங்கையின் பெருந்தோட்ட துறையான தேயிலை உற்பத்தி பாரிய பின்னடைவை எதிர்நோக்கி உள்ளது என்பது வேறு கதை.)
இவ்விரண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளிலும் புற்றுநோய் எச்சரிக்கை இடப்பட்டு இருந்தால் அவற்றை விற்பனை செய்ய அனுமதி கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. 
இந்த இரு வழக்குகளையும் உற்று நோக்கினால் புற்றுநோய் எச்சரிக்கை இடப்படாமல் இருந்தது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.
இதை வைத்து விளங்கலாம் ஏன் சிகரெட் பாக்கெட்டில் புற்றுநோய் எச்சரிக்கை என்று.
அரசாங்கம் மக்களின் சுகாதார நலனில் உண்மையான கரிசனை கொண்டிருந்தால் புகைத்தல், மதுபாவனையை தடை செய்ய வேண்டியதுதானே.
இப்படி ஒரு கருத்தை சொன்னால் இவனுக்கு  பொருளாதாரம் பற்றி என்ன தெரியும் என்ற ஒரு கேள்வி எழும்.
இலங்கையில் அப்படி என்ன பொருளாதாரத்தை தந்துவிட்டது இந்த புகைத்தல் மற்றும் மது பாவனை? 
நாட்டின் பட்ஜெட் பல நேரங்களில் புகையிலையையும் மதுபானத்தையுமே நம்பி உள்ளது. இவற்றினால் ஆண்டொன்றுக்கு 143 பில்லியன் வரி வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்கிறது.
ஆனால் இதன் அடுத்த பக்கம் இவற்றின் பாவனையால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுக்காக ஆண்டொன்றுக்கு அரசாங்கம் 212 பில்லியன் செலவழிக்கிறது.
அதாவது ஆண்டொன்றுக்கு 69 billion இழப்பு. 
எனவே இலவச சுகாதார சேவை இருக்கும் இலங்கை நாட்டில் புகைத்தல் மற்றும் மது பாவனையால் கிடைக்கும் வரி வருமானம் என்பது ஒரு மாயையே.
சிகரட் பிடிக்கும் யாரும் அது உடலுக்கு தீங்கானது, புற்றுநோயை உண்டாக்கும் என்று தெரியாமல் பிடிப்பதில்லை.
ஆக, இங்கு சிகரெட் பாக்கெட்டுகளில் இடப்படும் புற்றுநோய் எச்சரிக்கை என்பது அவற்றினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் பார்வதிகளும், பாத்திமாக்களும் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடி வரக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே.
உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

2,949 total views, 1 views today