By:- Fauzuna Binth Izzadeen (Psychologist)

சில தினங்களுக்கு முன் என்வீட்டுக்கு வந்த போதைப் பொருள் ஒழிப்பு விசேட பிரிவு அதிகாரி பதற்றமாய் சொன்னார்,”உம்மா உங்கட ஸ்கூல் பக்கத்து கடைல குளுக்கோஸ் போத்தல் வாங்கினேன்.வெயில் பட்டு மின்னியது ,சந்தேகத்தில் நக்கிப் பார்த்தேன்.புளிக்குகிது.இது ஷுவரா ஹெரோயின் தான் “…!

அதைக்கேட்டு சிரித்துவிட்டு நகர்ந்தேன்.

ஆனால் ஓரிரு தினங்களில் கீழுள்ள பதிவு கண்ணில் பட மகனின் கூற்று உண்மையாய் இருக்குமோ என அச்சமாக இருந்தது.

பொதுவாக போதைப் பொருள் வியாபாரிகள் தமக்கான நுகர்வோராக மாணவர்களையே குறிவைக்கிறார்கள்.ஏனெனில் பரவலடைய செய்ய இலகுவான வயது அது.எதையும் பரிசோதித்துப் பார்ப்பதில் ஆர்வம் மிகுந்த வயது.

கடந்த காலங்களில் பல பிரபல பாடசாலைகளின் காவல் அலுவலர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள் என பலரும் பாடசாலைகளில் போதைப் பொருள் விநியோகித்ததாக செய்திகளை கேட்டதுண்டு.

பொதுவாக சிறுவர்களை இலக்காகக் கொண்டு விளையாட்டுப் பொருளுடனான சிறிய மிட்டாய்கள் ,வர்ணங்களால்,விசித்திர வடிவங்களால் கவரும் மிட்டாய்களை வியாபாரிகள் பாடசாலைக்கு அருகில் விற்பனை செய்வதுண்டு.அவற்றின் இரசாயனங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து நிறையவே திரைப்படங்கள் பேசிவிட்டன.

ஆனால் அதே வடிவில் இப்போது போதைப் பொருட்களும் ஊடுறுவியிருக்கின்றன என்பது கசப்பானது.இனிப்புகளை பெரிதும் விரும்பும் சிறுவர்கள் வர்ணங்களால் கவரப்பட்டு தனக்கே தெரியாமல் போதைகளுக்கு அடிமையாகிறார்கள்.

எதை விற்கிறோம் என வியாபாரிகளுக்கும் தெரியாது,எதை வாங்குகிறோம் என மாணவர்க்கும் தெரியாது.ஆனால் இருண்டு போவதென்னவோ இந்த நாட்டின் எதிர்க் காலமே.

பாடசாலைக்கருகிலுள்ள கடைகள்,விற்பனைப் பொருள்கள் குறித்து மாணவரை பெற்றோர் அறிவுறுத்தினாலும் நண்பர்கள் உண்ணும் போது குறித்த மாணவனின் மன உறுதி தளர்ந்துவிடும்.அது அந்த வயதின் இயல்பு.

பாடசாலை நிர்வாகங்கள், ஊர் பள்ளிவாசல் தலைமைகள்,பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் ,பழைய மாணவர் சங்கங்கள் அருகிலுள்ள கடைகள் குறித்தும்,விற்பனைப் பொருட்கள் குறித்தும் தொடராக அவதானிப்பது நல்லது.

ஊரிலுள்ள கடைகளை மூடுவதோ,அங்கு விற்பனையாகும் பொருட்களை தடை செய்வதோ பாடசாலைகளால் முடியாது.பாடசாலை சிற்றுண்டிச் சாலையில் சுகாதாரத்திற்கு உகந்த உணவுகளை மட்டும் விற்பதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிக்கடைகளில் மாணவர் பொருட்கள் வாங்கும் சந்தர்ப்பங்களை குறைக்கலாம்.தவறும் பட்சத்தில் ஒழுக்கமான சந்ததியை உருவாக்கும் பாடசாலைகளின் நோக்கங்கள் கனவாகி விடலாம்.

இலங்கையில் கடந்த 20 வருடங்களில் அதிக உடல் நிறையுடையவர்களின் (obesity) தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதிலும் குறிப்பாக கட்டிளமைப் பருவத்தினர்.

பாடசாலைகளில் அல்லது பாடசாலைக்கருகிலுள்ள கடைகளில்
வாங்கக் கூடிய பழைய எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள்,கோதுமை சார் உணவுகள் மற்றும் மாப்பொருளை மட்டும் கொண்ட பேக்கரி உணவுகள் மாணவர்களை பெரிதும் கவர்கின்றன.என்னதான் வீட்டிலிருந்து உணவு கொண்டு போனாலும் சிறுவர்களது கவனம் அவ்வாறான உணவுகளை நோக்கியே செல்லும்.

அதிகரித்த உடல் நிறை,நீரிழிவு,குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய்களுக்கும் இவ்வாறான உணவுகளுக்கும் என்ன தொடர்பு? என நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை.

ஏற்கனவே வாரமொரு கல்யாண வீடு என்றும் வார இறுதியில் மெக்டொனல்ட்ஸ்,பர்கர் ஹட்,KFC என்றும் செலவழித்து நோய்களை வாங்கும் ஒரு சமூகத்தில் பாடசாலைகளும் பங்கு கேட்பதென்பது கவலைக்கிடமானது.

நோயாளி சமூகத்தை உருவாக்குவதில் மட்டுமல்ல ,எதிர்கால சந்ததியின் ஆயுட்காலத்தை குறைக்கும் பணியிலும் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்று சொல்வது பிழையில்லை என கருதுகிறேன்.

ஒரு பக்கம் போதை…!
ஒரு பக்கம் ஆரோக்கியமற்ற உணவு…!
நடுவில் எதிர்கால சந்ததி..!

என்ன செய்யலாம்?

*பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் கலப்புணவுகள், போசாக்குணவுகளை விற்பனை செய்வது பற்றி கவனம் செலுத்தலாம்.

*வெளிக் கடைகளை நோக்கி மாணவர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் சிற்றுண்டிச் சாலைகளை தன்னிறைவுடையவாக மாற்றலாம்.

* வெளி கடைகளுக்கு போக முடியாதவாறு பாடசாலை சட்ட திட்டங்களை இறுக்கலாம்.பாடசாலை விட்ட பின்னும் மாணவர்கள் போவது பற்றி கவனமெடுத்து அதுகுறித்து தெளிவூட்டலாம்.

*வீட்டிலிருந்து ஆரோக்கியமான உணவுகள் கொண்டுவரப்படுவதை உறுதிப்படுத்தலாம். (பெரும்பாலான சிங்கள பாடசாலைகளில் நடைமுறையிலுள்ளது)

* ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தையும் கற்றலில் அதன் பங்களிப்பையும் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளை மாணவர்களை,பெற்றோரை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யலாம்.

*பாடசாலைக்கருகிலுள்ள வெளிக் கடைகளிற்கு செல்லும் மாணவர்களுக்கு பொருத்தமான தண்டனைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கலாம்.

எனக்கென்ன,யாரோ தானே நாசமாகிறார்கள் என விட்டு விடுவதற்கொன்றும் மாணவர்கள் கால்நடைகளில்லை.ஒரு தேசத்தின் எதிர்காலம்,தூண்கள்.காப்பாற்ற வேண்டியது எல்லோரதும் கடமை.
உங்கள் பிள்ளை; என் பிள்ளை; யாரும் பாதிக்கப்படலாம்.

படத்தில்;
மாத்தளை பரிதோமாவின் கல்லூரிக்கு அருகிலுள்ள கடையில் ஐந்து ரூபாய்க்கு குளுக்கோஸ் எனும் பெயரில் இது விற்பனையாகிறது. இது குளுக்கோஸ் இல்லையென்பதை உங்கள் குழந்தைக்கு அறியப் படுத்துங்கள்.

 

இலங்கையில் போதை பாவனை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு இதனை Click செய்க.

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

1,184 total views, 2 views today