நோன்பு திறந்தவுடன் (இப்த்தார் நேர) தலைவலிக்கான (Headache) காரணங்களும் தவிர்க்கும் வழிகளும்!
By:- Dr Ziyad Aia (MBBS, MD-Health Informatics)
ரமலான் நோன்பு ஆரம்பித்தவுடன் நோன்பு நோக்கும் பலர் எதிர்நோக்கும் பிரச்சினை நோன்பு திறந்தவுடன் உண்டாகும் தலைவலி. இது பொதுவாக நோன்பு பிடிக்கும் ஆரம்ப நாட்களில் அதிகமாக காணப்படும்.
பொதுவாக ரமலான் நோன்பு என்பது அதிகாலை 4.30 இல் இருந்து மாலை 6.30 வரை கிட்டத்தட்ட 14 மணிநேரம் எதுவும் உண்ணாமல் பருகாமல் இருப்பதாகும். (இந்த நேரம் சூரியன் உதிப்பு மறைவு நேரத்தை பொறுத்து நாட்டுக்கு நாடு வேறுபாடும். Eg: Norway போன்ற நாடுகளில் 20 மணித்தியாலம்.)
பொதுவாக நோன்பு திறக்கும் நேரம் உண்டாகும் தலைவலி மன அழுத்தத்தின்போது உண்டாகும் தலைவலியை ஒத்தததாக இருக்கும். (tension Headache. non-pulsating pain of mild or moderate intensity). ரமழானுக்கு முந்திய காலங்களில் அடிக்கடி தலைவலி, Migraine போன்றவற்றால் அவதியுறுவோருக்கு நோன்பு திறந்தவுடன் தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
❓ நோன்பு திறந்தவுடன் சடுதியான தலைவலிக்கான காரணங்கள் என்ன?
❌ 01. நோன்பு திறக்கும்போது ஒரேயடியாக அதிக உணவினை உண்ணல்:
நோன்பு நேரம் இரத்தத்தில் குறைந்த நிலையில் பேணப்பட்ட Glucose அளவு சடுதியாக அதிகரிக்கும்போது சிலருக்கு தலைவலி உண்டாகிறது. அதிலும் குறிப்பாக சீனி சேர்க்கப்பட்ட பானங்கள் (Sugary Drinks, Faluda etc) மிக விரைவில் அகத்துறிஞ்சப்பட்டு Glucose அளவை சடுதியாக அதிகரிக்கிறது.
❌ 02. மூளைக்கான இரத்த ஓட்டம் குறைவடைதல்:
பட்டணியாக கிடந்த சமிபாட்டு தொகுதிக்கு நோன்பு திறக்கும்போது ஒரேயடியாக அதிக உணவு செல்லும்போது சமிபாட்டு தொகுதியை நோக்கி சடுதியாக கூடுதலான இரத்த ஓட்டம் செல்வதால் மூளைக்கான ஓட்ஸிசன் குறைவடைந்து தலைவலி, சோர்வு ஏற்படுகிறது. எமது biological Clock இல் ஏற்படும் மாற்றம் காரணமாக இது நோன்பின் ஆரம்ப நாட்களில் காணப்படும். பின்னர் உடல் இந்த நேர மாற்றத்துக்கு இயைபாக்கம் அடைவதால் பிந்திய நாட்களில் தலைவலி வருவது குறைந்துவிடும்.
❌ 03. நித்திரை கொள்ளும் விதத்தில் (Sleeping Pattern) நிகழும் மாற்றம்;
Biological Clock இல் நிகழும் மாற்றத்தோடு இரவு முழுக்க விழித்திருந்தல், அதிக நேரம் blue light எனும் Phone, PC வெளிச்சம் மற்றும் தொலைகாட்சி பார்த்தல் என்பவற்றால் கண்கள், உடல் சோர்வடைந்து நோன்பு நேரத்திலும் அடிக்கடி தலைவலி உண்டாகலாம்.
❌ 04. Plain tea, coffee, or Nescafe அடிக்கடி குடிப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டி ஏற்படல்:
மேற்படி பானங்கள் அடிக்கடி அருந்தவோர் நோன்பு நேரங்களின் அருந்த முடியாமல் போவதால் இரத்தத்தில் caffeine அளவு குறைந்து தலைவலி (Withdrawal Headache) உண்டாகலாம். (மத்திய கிழக்கு நாடுகளில் பொதுவாக உணரப்படும் ஒரு விடயம்.)
❌ 05. ஸஹர் நேரம் சரியான உணவுகள் உட்கொள்ளாமை:
நோன்பு நோற்கும்போது உணவு உட்கொள்ளாத காலப்பகுதிக்கு தேவையான சரியான உணவுகள் உட்கொள்ளப்பட வேண்டும். பசித்திருப்பதால் தலைவலி (Fasting Headache) உண்டாகலாம். பலர் தூக்க மயக்கம், இரவு நேரம் வயிறை நிரப்பிவிட்டதால் பசியினமை போன்றவற்றால் சரியான ஸஹர் உணவை தவற விடுகின்றனர்.
❌ 06. தாகம்:
உஷ்ணமான காலநிலை, வெயிலில் வேலை செய்தல், நோன்பு திறந்த நேரங்களில் சரியான அளவு நீர் அருந்தாமை போன்ற காரணங்களால் உடலில் நீர்ப்பற்றாக்குறை எற்பட்டு தலைவலி உண்டாகிறது.
❌ 07. இரத்த அழுத்தம் எனும்Hypertension (பிரஷர்) போன்ற நோய் நிலைமை உள்ளவர்கள்:
நோன்புகாலம் சரியான மாத்திரைகளை அருந்துவதை தவறவிடுவதாலும் BP கட்டுப்படாமல் விடுவதால் தலைவலி உண்டாகலாம்.
❌ 08. Anemia போன்ற நோய் நிலைமைகள்:
இரத்தத்தில் Haemoglobin அளவு குறைவாக உள்ளவர்களில் மூளைக்கு சரியான அளவு ஓட்ஸிசன் கிடைக்காமல் விடுவதால் தலைவலி உண்டாகலாம். இவ்வாறானவர்களுக்கு நோன்பு அல்லாத காலங்களிலும் அடிக்கடி தலைவலி காணப்படும்.
❌ 09. Migraine போன்ற தலைவலியினால் ஏற்கனவே அவதியுருவோர் நோன்புகாலங்களிலும் குறிப்பாக நோன்பு திறந்தவுடன் தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகளை காண்பிக்கலாம்.
❓ நோன்பு திறந்தவுடன் சடுதியான தலைவலி ஏற்படுவதை தவிர்க்கும் வழிகள்:
✅ 01. நோன்பு திறத்தலை அளவான உணவுகளுடன் ஏற்பாடு செய்தல்:
3 பேரீத்தம்பழம், அதிகளவு நீர், கொஞ்சம் இடைவேளை விட்டு கஞ்சி. Short eats எனப்படும் எண்ணெய் தோய்ந்த உணவுகளை குறைத்தல் / இடைவேளை விட்டு உண்ணல்.
Sugary Drinks ஐ முடிந்த அளவு தவிர்த்தல். இவை உடலில் glucose அளவை சடுதியாக அதிகரிக்கும். Sugary Drinks தாகத்தை தீர்க்காது அது மேலும் அதிகரிக்க செய்யும்.
✅ 02. நோன்பு திறக்கும்போது உண்ணும் உணவுகளை இடைவேளை விட்டு உண்ணல்:
ஒரேயடியாக உண்ணாமல் இப்த்தாரின் போது கொஞ்சம், மஹ்ரிப் தொழுதபின் கொஞ்சம், சிறிதளவு நடை பயிற்சி செய்தபின் என பிரித்து உண்ணல். (Mind Voice: நாம பிரித்து உண்ண முன்னாடி அடுத்தவர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்களே.) பிரித்து உண்ணும் பழக்கத்தை ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் பழக்கப்படுத்தல். இதனால் சடுதியான சோர்வு , தலைவலி என்பவற்றை தவிர்க்கலாம்.
✅ 03. சஹர் உணவை தாமதப்படுத்துங்கள். நோன்பு காலத்தில் உடலுக்கு நீண்ட நேரம் சக்தியை வழங்கும் ஆரோக்கியமான முழுமையான உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெதுவாக ஜீரணமாகக்கூடிய முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது.
✅ 04. இப்தார் மற்றும் சஹர் உணவில் மிதமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் சாதாரண அளவு குளுக்கோஸைப் பராமரிக்கலாம்.
✅ 05. ரமழானில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். தாமதமாக எழுந்திருப்பதைத் தவிர்க்கவும், பகலில் ஒரு சிறு தூக்கத்தை எடுத்துக் கொள்ளவும்.
✅ 06. கடின உழைப்பைத் தவிர்ப்பதுடன், வியர்வை மற்றும் நீரிழப்பை தவிர்ப்பதன் மூலம் பகலில் தலைவலி மற்றும் தாகத்தை தவிர்க்கலாம்.
✅ 07. அதிக Coffee அருந்த பழக்கப்பட்டவர்கள் நோன்பு பிடிக்க ஒரு வாரம் முன்பிருந்தே படிப்படியாக குறைப்பதன் மூலமும் நோன்பு திறந்தபின் அருந்துவதன் மூலமும் தலைவலியை குறைப்பிக்கலாம்.
✅ 08. ஏற்கனவே இரத்த அழுத்தம், anemina, Migraine போன்ற நோய் நிலைமைகளில் அவதியுரருவோர் வைத்திய ஆலோசனைப்படி மருந்துகளை தொடர்ந்து அருந்த வேண்டும்.
✅ 09. மேலே குறிப்பிட்ட முறைகளை கையாண்டும் தொடர்ந்து தலைவலியை உணர்வோர் வைத்திய ஆலோசனையுடன் NSAIDS மாத்திரைகளை பாவிக்கலாம். NSAIDS மாத்திரைகள் பொதுவாக Gastritis ஐ உருவாக்கவல்லவை என்பதால் நோன்புகாலங்களில் மிக அவதானமாக பாவிக்க வேண்டும்.

889 total views, 1 views today