பிள்ளை Clinic இல் பல்லை பார்ப்பது ஏன்?
❓ கர்ப்பகாலத்தில் சிறந்த வாய் / பல் ஆரோக்கியத்தை பேணுவது ஏன் முக்கியமானது?
By Dr Ziyad Aia

கர்ப்பிணித் தாய்மாரின் பல்/வாய் சுகாதாரத்தை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பற்களில் காணப்படும் கிருமித் தொற்று தாயின் இரத்தத்தின் ஊடாக சென்று கருப்பையில் உள்ள Amniotic Fluid ஊடாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான தொற்று காரணமாக:

🛑 குறை மாத பிறப்பு (உரிய நாளுக்கு முன்னதாகவே கருப்பை சுருங்க ஆரம்பித்தல்.)

🛑 நிறை குறைதல்,

🛑 மற்றும் பிறக்கும் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படலாம்.

❓ கர்ப்பிணிகள் வாய் நோய்களுக்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக இருப்பது ஏன்?

✅ கர்ப்ப காலத்தில் உடலில் ஓமோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக முரசு நோயினால் பாதிக்கபடபட வாய்ப்புண்டு. (Gingivitis எனும் குருதி வெளியேறுகின்ற வீங்கிய முரசு)

✅ கர்ப்பகாலத்தில் அடிக்கடி வாந்தி (சத்தி) எடுப்பதால் இரைப்பையிலுள்ள அமிலம் சத்தியுடன் வெளியேறி பற்களை அடிக்கடி தாக்குவதாலும்

✅ கர்ப்ப காலத்தில் உணவு விருப்புக்கள் மாறுவதன் காரணமாக இனிப்பு, புளிப்பு உணவுகளை அதிகம் எடுப்பதாலும் பல் மிளிரி அரிப்புக்குள்ளாகும். (வாயினுள் அமிலச் சூழல் ஏற்படுத்துவதன் மூலம்)

✅ அடிக்கடி உண்பதாலும்

✅ ஓங்களம் (குமட்டல்) அல்லது சத்தியால் பல்துலக்குவதில் ஏற்படும் சிரமத்தாலும்

✅ கல்சியம் குறைபாட்டினால் பல் மிளிரிகள் மேன்மையடைந்து பாதிப்படையும் வாய்ப்பு உருவாதல்.

போன்ற காரணங்களால் பற் சுகாதாரம் பாதிக்கப்பட்டு பற்களுக்கிடையே உணவு தேக்கம் அடைவதாலும் பல் நோய்கள் துரிதமாக உருவாகும்.

இதனால் கர்ப்ப காலத்தில் முதல் 3-6 மாதங்களுக்கிடையில் கட்டாயம் பல்லை சோதிக்க வேண்டும்.

பற்சூத்தையிருப்பதால் அப்பல்லைப் பிடுங்க வேண்டும் என பல்வைத்தியர் சிபாரிசு செய்தால் அவற்றை பிடுங்கிக் கொள்ள வேண்டும். பலரும் நம்புவது போல கர்ப்பகாலத்தில் சூத்தைப்பற்களைப் பிடுங்குவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது. சூத்தைப் பல்லை பிடுங்காது வைத்திருப்பதே ஆபத்தானது.

❓ கர்ப்ப காலத்தில் பற்கள் பாதிக்கப்படும் அபாயத்தை எவ்வாறு குறைத்துக்கொள்வது?

✅ நிறையுணவை உண்ணுங்கள்.

✅ அமில, இனிப்பு உணவுகளை உண்பதைக்கட்டுப்படுத்துங்கள்.

✅ முடியுமான வேளைகளில் உணவை உண்ட பின் சிறிதளவாவது நீரை அருந்துவதுடன் சத்தியின் பின் வாயைக் கழுவுங்கள்.

✅ தினமும் இரு தடவைகளாவது (காலை, இரவு நித்திரைக்கு முன்) புளோரைட் உள்ள பற்பசையால் பற்தூரிகை கொண்டு முறையாக பல் துலக்குங்கள்.

✅ பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் விதந்துரைத்த சிகிச்சை முறைகளையும் ஆலோசனைகளையும் கடைப்பிடியுங்கள்.

🛑 பற்சூத்தை உள்ள கர்ப்பவதிக்கு பற்சிதைவு அபாயமும் பிறப்பு நிறை குறைந்த குழந்தை பிறப்பதற்கான அபாயமும் அதிகம்.

925 total views, 1 views today