புதிதாய் பிறந்த குழந்தைகளின் உச்சந்தலை மென்மையாகவும், சூடாகவும் இருப்பதன் காரணம் என்ன?

By: Dr Ziyad Aia 

பொதுவாக குழந்தைகள் பிறந்து 2 வருடங்கள் வரை உச்சந்தலை மென்மையாகவும் அதிக சூடாகவும் இருப்பதை கண்டு சில தாய்மார் அச்சம் அடைவது உண்டு? ஏன் இப்படி காணப்படுகிறது?

இதனை உச்சிக்குழி (Fontanelle) என்பார்கள்.
குழந்தையின் மண்டை ஓடு ஆறு தனிதனி ஓடுகள் மூலம் அமைந்துள்ளது. இவை அனைத்தும் மென்மையாக எளிதில் விரிவடையக் கூடிய வகையில் சவ்வினால் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தலையில் பொதுவாக 6 Fontanelle காணப்படும்.

இவற்றில் பிரதானமானவைதான்
01. Anterior Fontanelle (Diamond வடிவானது)
02. Posterior Fontanelle (முக்கோண வடிவானது)
ஆகிய இரண்டும். (படத்தை பார்க்க.)

இவற்றின் அனுகூலங்கள்:
01. மண்டையோட்டு என்புகளை விட இவை மென்மையாக இருப்பதால் பிரசவத்தின் போது தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியேறும்போது நெகிழ்வடைந்து மண்டையோடுகள் ஒன்றன்மீது ஒன்று ஏறி சிறிய பிறப்பு வழி ஊடாக வெளிவர உதவுகிறது. இதனால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.
(குழந்தை பிறந்த பின்னர் பாட்டிமார் மீண்டும் தலையை கைகளால் அழுத்தி உருண்டை வடிவத்துக்கு கொண்டுவர இந்த Fontanelle இல் உள்ள சவ்வுகள் உதவுகின்றன.)

02. குழந்தையின் முதல் இரண்டு வயதுவரை மூளையின் அதீத வளர்ச்சி காணப்படும். இதன்போது மண்டையோடு விரிந்து இடம்கொடுக்க இந்த இணைப்புகள் உதவுகின்றன.
இரண்டு வயதை அடையும்போது தலை 2/3 வீதமான வளர்ச்சியை கண்டுவிடும்.

03. குழந்தைகள் நடை பயில அடிக்கடி விழுந்து எழும்போது தலையில் விழும் அடிகளை shock absorbers போன்று செயற்பட்டு மூளைக்கு பாதிப்பு இல்லாமல் செய்கிறது.

இது இறைவனின் ஒரு அற்புத படைப்பாகும்.

உச்சசந்தலையில் காணப்படும் உச்சிக்குழி பகுதி மென்மையாக காணப்படுவதால் அங்கே கையை வைக்கும்போது உள்ளே இரத்த ஓட்டம் உணரப்படுவதால் அப்பகுதி ஏனைய பகுதிகளை விட சூடாக காணப்படும். இதனை கண்டு அச்சம் கொள்ள தேவை இல்லை.

குழந்தைகளுக்கு வயிற்றுளைவு போன்ற நீரிழப்புகள் ஏட்படும்போது இந்த உச்சிக்குழி பகுதி உட்குழிவாகவும், மூளையில் Meningitis போன்ற கிருமி தொற்றுகள் ஏற்படும்போது வெளித்தள்ளியும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

பொதுவாக Posterior Fontanelle குழந்தை பிறந்து சில மாதங்களிலும், Anterior Fontanelle குழந்தை பிறந்து ஒன்று தொடக்கம் ஒன்றரை வருடங்களில் என்பினால் பிரதியீடு செய்யப்படும்.

Sources:

Medline Plus, Cranial Sutures, https://medlineplus.gov/ency/article/002320.htm

Babycentre, Soft Spots, http://www.babycentre.co.uk/x552709/what-are-the-soft-spots-on-my-newborns-head

American Family Physician, The Abnormal Fontanelle, http://www.aafp.org/afp/2003/0615/p2547.html

1,855 total views, 5 views today